சென்னை – (மலேசிய நேரம் இரவு 9.45 மணி) நேற்று மறைந்த கலைஞர் மு.கருணாநிதியின் நல்லுடல் அண்ணா சதுக்கத்தில் இந்திய நேரப்படி மாலை 7.00 மணிக்கு 21 மரியாதை குண்டுகள் முழங்க, முழு இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்த அவரது நல்லுடல் அண்ணா சதுக்கம் வந்தடைந்ததும், சில சடங்குகளுக்குப் பின்னர் சந்தனப் பேழையில் மாற்றி வைக்கப்பட்டது. அவரது நல்லுடல் மீது போர்த்தப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடி அழகாகப் பிரித்தெடுக்கப்பட்டு மடிக்கப்பட்டு, மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கலைஞரின் நீண்ட கால நண்பர் பேராசிரியர் க.அன்பழகன், முன்னாள் பிரதமர் தேவகவுடா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பலர் அண்ணா சதுக்கத்தில் நடந்த இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டனர்.
கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் கண்ணீருடன் பூத்தூவி இறுதி மரியாதை செலுத்திய பின்னர் – கலைஞரின் நல்லுடலைத் தொட்டு வணங்கிய பின்னர் – சந்தனப் பேழையில் வைக்கப்பட்டிருந்த அவரது நல்லுடல் மெல்ல மெல்ல சவக்குழிக்குள் இறக்கப்பட்டது. அப்போது 21 மரியாதை குண்டுகள் முழங்கப்பட்டன.
அவரது நல்லுடல் வைக்கப்பட்டிருந்த சந்தனப் பேழையில் “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் கலந்து கொண்ட முக்கியப் பிரமுகர்களும், அவரது குடும்பத்தினரும் கைப்பிடி மண்ணை எடுத்து கலைஞர் நல்லுடல் இறக்கப்பட்டிருந்த சவக்குழிக்குள் தூவினர்.
இராணுவத்தினரும், பணியாளர்களும் மண்கொண்டு சவக்குழியை மூடத் தொடங்கிய பின்னர் ஒவ்வொருவராக அந்த இடத்தை விட்டு அகலத் தொடங்கினர்.