கோலாலம்பூர்- பின்தங்கியிருக்கும் இந்திய சமுதாயத்தை முன்னேற்ற – அவர்களுக்கான சமூக பொருளாதார உருமாற்றத் திட்டங்களுக்காக முதல் கட்டமாக அடுத்த 10 ஆண்டுகளில் 4 பில்லியன் ரிங்கிட் வழங்கப்படும் என பிரதமர் துறை அமைச்சர் பொ.வேதமூர்த்தி நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற மேலவையில் அறிவித்தார்.
இந்த நிதி இந்திய சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு குறிப்பாக பி-40 எனப்படும் அடித்தட்டு 40 விழுக்காடு மக்களுக்கு சென்று சேரும் வண்ணம், அவர்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்றும் வேதமூர்த்தி மேலும் கூறினார்.
“நாட்டின் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்குடமையை மேலும் உயர்த்துவதற்கு அரசாங்கம் முனைப்பும் ஆர்வமும் கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக இதற்கான நிதி அரசாங்கத்தின் மூலமும் அரசாங்க துணை நிறுவனங்களின் மூலமும் தனியார் துறையின் மூலமும் பெறப்படும்” என்றும் வேதமூர்த்தி தெரிவித்தார்.
முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் இந்தியர்களுக்காக அறிமுகப்படுத்திய இந்தியர் புளுபிரிண்ட் என்ற திட்டத்தின் மூலம் இந்தியர்களின் பங்குடமையை அரசாங்கம் உயர்த்துமா என ஜபிஎப் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் வேதமூர்த்தி மேற்கண்ட விவரங்களை வெளியிட்டார்.
மலேசிய இந்தியர் புளுபிரிண்ட் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட அத்தனை முடிவுகளையும் அரசாங்கம் தற்போது மறுஆய்வு செய்து வருவதாகவும் மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசாங்கம் முயற்சிகள் எடுத்து வருவதாகவும் வேதமூர்த்தி குறிப்பிட்டார்.