Home நாடு ஸ்ரீ செத்தியா – பலாக்கோங் : 40 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்தனர்!

ஸ்ரீ செத்தியா – பலாக்கோங் : 40 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்தனர்!

1022
0
SHARE
Ad

பலாக்கோங் – இன்று நடைபெறும் பலாக்கோங், ஸ்ரீ செத்தியா சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு காலை 8.00 மணிக்குத் தொடங்கிய நிலையில் இன்று மாலை 4.00 மணி வரையில் சுமார் 40 விழுக்காடு வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்திருக்கின்றனர் என மலேசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பலாக்கோங்கில் இன்று மாலை 4.00 மணியோடு 39 விழுக்காடு வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

ஸ்ரீ செத்தியா தொகுதியில் மாலை 4.00 மணியோடு 41 விழுக்காடு வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பொதுத் தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே இடைத் தேர்தல் வருவதும், தேர்தல் முடிவுகள் அரசியல் ரீதியாக எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதாலும் பெரும்பான்மை வாக்காளர்கள் இந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிக அளவில் வெளியே வந்து வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

பலாக்கோங் சட்டமன்றம்

வோங் சியூ கி

பலாக்கோங் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 16 வாக்களிப்பு மையங்களில் மொத்தம் 128 வரிசைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. வாக்களிப்பு மையங்களுக்காக 14 பள்ளிகள், ஒரு பொது மண்டபம், ஒரு பொழுதுபோக்கு மையம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

பலாக்கோங் 62,219 வாக்காளர்களைக் கொண்டிருக்கின்றது.

பக்காத்தான் கூட்டணி சார்பாக ஜசெகவின் வோங் சியூ கி பலாக்கோங் தொகுதியில் களமிறங்க, அவரை எதிர்த்து மசீசவின் டான் சீ தியோங் போட்டியிடுகிறார். தேசிய முன்னணி சின்னத்தைத் தவிர்த்து முதன் முறையாக மசீச தனது சொந்த சின்னத்தில் பலாக்கோங் தொகுதியில் போட்டியிடுகிறது.

ஸ்ரீ செத்தியா சட்டமன்றம்

ஹலிமே அபு பாக்கார்

ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதியில் 18 வாக்களிப்பு மையங்களும் அவற்றில் 115 வரிசைகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

14 பள்ளிகள், ஒரு தொழில்நுட்பப் பயிற்சிப் பள்ளி (போலிடெக்னிக்), 3 பொதுமண்டபங்கள் ஆகியவை வாக்களிப்பு மையங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த சட்டமன்றத் தொகுதியில் 50,692 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

பிகேஆர் கட்சியின் ஹலிமே அபு பாக்கார் பக்காத்தான் கூட்டணி சார்பாகப் போட்டியிட அவரை எதிர்த்து பாஸ் கட்சியின் சார்பில் டாக்டர் ஹலிமா அலி களத்தில் இறங்கியுள்ளார்.

இரண்டு தொகுதிகளிலும் வாக்களிப்பு இன்று மாலை 5.30 மணியோடு நிறைவு பெறும்.

இன்றிரவு 10.00 மணிக்குள் இந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.