Home நாடு அன்வாருடன் மோதப் போவது மஇகாவா? அம்னோவா?

அன்வாருடன் மோதப் போவது மஇகாவா? அம்னோவா?

1373
0
SHARE
Ad

போர்ட்டிக்சன் – நாடாளுமன்றத்திற்குத் திரும்ப டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தேர்ந்தெடுத்திருக்கும் தொகுதி போர்ட்டிக்சன் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், அதன் தொடர்பில் நடைபெறப் போகும் இடைத் தேர்தலில் அந்தத் தொகுதியை மஇகா அம்னோவுக்கு விட்டுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 9 பொதுத் தேர்தலில் போர்ட்டிக்சன் தொகுதியில் மஇகா சார்பில் டத்தோ வி.எஸ்.மோகன் போட்டியிட்டார். பொதுவாக இடைத் தேர்தல் என்று வரும்போது எந்தக் கூட்டணிக் கட்சி பொதுத் தேர்தலில் போட்டியிட்டதோ அந்தக் கட்சிக்கே இடைத் தேர்தலிலும் அந்தத் தொகுதியை ஒதுக்குவது என்பது தேசிய முன்னணியின் பாரம்பரியமாக இருந்து வந்தது.

அதன்படி நடைபெறவிருக்கும் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் மஇகாதான் போட்டியிட வேண்டும். ஆனால், நிற்கப் போவது பலம் வாய்ந்த அன்வார் இப்ராகிம் என்பதால் அந்தத் தொகுதியை அம்னோவுக்கு மஇகா விட்டுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

உதாரணமாக, உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் பக்காத்தான் – பிகேஆர் வேட்பாளராக இருந்து வந்த டத்தோ டாக்டர் சைனால் அபிடின் அகமட் 2010-இல் காலமானதைத் தொடர்ந்து நடந்த இடைத் தேர்தலில் பாரம்பரியப்படி மஇகாவுக்கே அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. பிகேஆர் கட்சியின் சார்பாக வலுவான வேட்பாளராகப் பார்க்கப்பட்ட டத்தோ சைட் இப்ராகிம் போட்டியிட்டார். எனினும் மஇகா சார்பாக (டத்தோ) பி.கமலநாதன் நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றார்.

ஆனால், இந்த முறை அத்தகைய பாரம்பரியம் பின்பற்றப்படாது எனக் கருதப்படுகிறது.

அதே போன்று இந்தத் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிட்டதால், இந்த முறை தங்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் நல்லிணக்கத்தின்படி பாஸ் கட்சி போர்ட்டிக்சனில் போட்டியிடாது ஒதுங்கிக் கொண்டு அம்னோ-தேசிய முன்னணிக்கு வழிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்