Home கலை உலகம் திரைவிமர்சனம்: “சீமராஜா” – சிவகார்த்திகேயனுக்கு பெரும் சறுக்கல்!

திரைவிமர்சனம்: “சீமராஜா” – சிவகார்த்திகேயனுக்கு பெரும் சறுக்கல்!

1939
0
SHARE
Ad

பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் சீமராஜா திரைப்படம் இரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருப்பதோடு, அடுத்தடுத்து வெற்றிப்படங்களைத் தந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு ஒரு சறுக்கலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் நாட்டிலும் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்ட தொடர் விடுமுறை என்பதால் படத்தின் முதல் கட்ட வசூல் (opening collection) அபாரமாக இருக்கும் என்பதைத் தவிர, படம் வசூல் ரீதியாகக் தோல்வி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரண படமாக இதே காலகட்டத்தில் வெளிவந்திருக்கும் ‘யூ-டர்ன்’ அற்புதமாக இருக்கிறது என அந்தப் படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பு சீமராஜாவின் வசூலைப் பாதிக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

முதலாவதாக சீமராஜா படம் முழுக்க சிவகார்த்திகேயனை ஏதோ சூப்பர் ஸ்டார் அளவுக்கு, வழக்கமாக விஜய் படங்களில் காட்ட முற்படுவதுபோல் காட்ட இயக்குநர் பொன்ராம் முயற்சி செய்திருக்கிறாரே தவிர, அந்த அக்கறையை கதையிலோ, திரைக்கதையிலோ காட்டவில்லை.

விளைவு? முதல் பாதி படம் முழுக்க ஒரே மொக்கை நகைச்சுவையாக சிவகார்த்திகேயனும், சூரியும் படத்தை நகர்த்த முற்படுகிறார்கள். பொன்ராமின் முந்தைய படங்களில் (வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்) வித்தியாசமான திரைக்கதையின் சூழலும், சம்பவங்களின் பின்னணியும் நகைச்சுவைக் காட்சிகள் எடுபடுவதற்கு உதவி புரிந்தன.

ஆனால், இதிலோ படம் தொடங்கியது முதல் பகைமை பாராட்டும் பக்கத்து ஊர் பெண்ணை விரட்டி விரட்டி சிவகார்த்திகேயன் காதலிப்பதையே திரும்பத் திரும்பக் காட்டுகிறார்கள். இன்னும் எத்தனை படங்களில் இந்த மாவையே அரைப்பார்களோ தெரியாது.

சமந்தா சிலம்பம் சுற்றுகிறார் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. வழக்கம்போல் அழகு பொம்மையாக வந்து போகிறார்.

தேவையில்லாத திணிப்புகள்

அடுத்ததாக, இடைவேளைக்குப் பின்னரும் அதே காதல் கதைதான் தொடர்கிறது. அந்தக் கால மன்னராக சிவகார்த்திகேயன் வருவதும், அந்தக் காட்சிகளில் பாகுபலி அளவுக்கு தொழில்நுட்பத்துடன் சண்டைக் காட்சிகள் அமைத்ததும், தேவையில்லாத செலவை ஏற்படுத்தும் திணிப்பு. விவசாய நிலங்களை மேம்பாட்டுக்காக விற்பனை செய்வது என்ற தமிழ் நாட்டின் முக்கியமான நடப்புப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கும் படக்குழு அதை எத்தனையோ நிகழ்கால சம்பவங்களைக் கொண்டு வடிவமைத்திருக்கலாம். கோட்டை விட்டு விட்டார்கள்.

மீண்டும் நெப்போலியனைப் பார்க்கும் போது, நிமிர்ந்து உட்காருகிறோம். ஆனால் அவரை காமெடியாகவும் இல்லாமல், சீரியசாகவும் இல்லாமல் காட்டி, அவரது கதாபாத்திரத்தையே சொதப்பி விட்டார்கள்.

சமந்தாவைக் கவர சிவகார்த்திகேயன் மாறுவேடங்களில் வருவதும் எம்ஜிஆர் காலத்துப் படங்கள் அளவுக்கு மிகப் பழைய உத்திகள். எந்த காலகட்டத்தில் வாழ்கிறீர்கள் பொன்ராம்?

சிம்ரன் – ஆறுதல்

படத்தின் ஒரே ஆறுதல் – கவர்கின்ற அம்சம் – சிம்ரன்! வயதானாலும் கவர்ச்சி குறையவில்லை அம்மணிக்கு. ஆனால், அவர் சில காட்சிகளிலேயே வருவதும், ஒரே மாதிரியான லம்பாடி சண்டை வசனங்களையே திரும்பத் திரும்பப் பேசுவதும் பெரும் குறை. அவரது கதாபாத்திரத்தை இன்னும் நன்கு செதுக்கியிருந்தால், படத்திற்கு இன்னொரு பரிமாணம் கிடைத்திருக்கும், படையப்பாவின் நீலாம்பரி, ரம்யா கிருஷ்ணன் போல! அவருக்கு இணையாக வரும் வில்லன் லால் அதட்டலாகப் பேசுகிறாரே தவிர, சிம்ரனுக்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

படத்தை இரசிக்க வைக்கும் இன்னொரு அம்சம் சிறந்த ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் வழங்கியிருக்கும் ஒளிப்பதிவு. குறையில்லாமல் செய்திருக்கிறார்.

படத்தின் மற்றொரு ஆறுதல் பாடல்களும், பின்னணி இசையும்! டி.இமான் நன்றாக உழைத்திருக்கிறார். பாடல்கள் எங்கேயோ கேட்ட தாளத்தை மீண்டும் கேட்பது போல் இருந்தாலும், பிரபலமாகிவிட்டன. பின்னணி இசையில், அதிலும் குறிப்பாக சிவகார்த்திகேயனைக் காட்டும் காட்சிகளில் ஓவரான சத்தம்! அதை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

சூரிக்கு கதாநாயகனோடு இணைந்து வரும் வழக்கமான வேடம் என்றாலும், மனதில் ஒட்டவில்லை! வசனகர்த்தாவும், இயக்குநரும் இணைந்து மொக்கை நகைச்சுவை சம்பவங்களை அமைத்திருப்பதால் சூரியால் சோபிக்க முடியவில்லை. அவருக்கு 3 பெண்டாட்டிகள் என்று ஒரே காட்சியில் காட்டிவிட்டு பின்னர் அதை வைத்தே சில வசனங்களை வைத்திருக்கிறார்கள். அதுவும் தேவையில்லாத இணைப்பு! ஒரு காட்சியில் தனது கட்டுமஸ்தான சிக்ஸ்-பேக் உடம்பைக் காட்டி கைத்தட்டல் வாங்குகிறார் சூரி.

சிவகார்த்திகேயனுக்கு ஒரு செய்தி! சாதாரண நிலையிலிருந்து இந்த அளவுக்கு உயர்ந்த நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் இது! கதைகளுக்கு முக்கியத்துவம் இல்லாத – கதாநாயகனை பந்தாவாகக் காட்டும் ‘சீமராஜா’ போன்ற படங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களை இன்னொரு ராமராஜனாக்கி விடுவார்கள்!

படம் பார்க்கலாமா என்ற இரசிகர்களின் கேள்விக்கு…

சிவகார்த்திகேயனுக்காக ஒருமுறை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து படம் பார்த்து விட்டு பின்பு ஏன் பார்த்தோம் என்று திட்டப் போகிறீர்களா? அல்லது பார்க்காமலே தவிர்த்து விட்டு நிம்மதியாக இருக்கப் போகிறீர்களா?

இரசிகர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

-இரா.முத்தரசன்