பெட்டாலிங் ஜெயா – நேற்று சனிக்கிழமை இரவு பெட்டாலிங் ஜெயா பாடாங் திமோர் மைதானத்தில் மலேசியாகினி இணைய ஊடகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட மலேசிய தின ஒற்றுமை கலைநிகழ்ச்சியில் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
55-வது மலேசியதினத்தை முன்னிட்டு இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலைநிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மலேசியாகினி இத்தகைய கலைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது இதுவே முதன் முறையாகும். சிங்கப்பூருக்கு வருகை ஒன்றை மேற்கொண்டிருந்த அன்வார் அங்கிருந்து நேற்று திரும்பியதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
டத்தோஸ்ரீ சித்தி நூர்ஹலிசா உள்ளிட்ட பல்வேறு மலேசியக் கலைஞர்கள் இந்தக் கலைநிகழ்ச்சியில் பாடல்களைப் பாடி மக்களை மகிழ்வித்தனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அன்வார் மலேசியர்கள் அனைவரும் இணைந்து நாட்டை மீண்டும் மேம்படுத்த முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஊழல், இனவெறி போன்றவற்றிலிருந்து மலேசியர்கள் விலகி இருக்க வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
இந்த கலைநிகழ்ச்சியில் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் மற்றும் துணையமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.