Home நாடு தேசிய முன்னணியில் இனி ஐபிஎப் உள்ளிட்ட கட்சிகள் இணையலாம்

தேசிய முன்னணியில் இனி ஐபிஎப் உள்ளிட்ட கட்சிகள் இணையலாம்

1739
0
SHARE
Ad
ஐபிஎப் 26-வது மாநாட்டில் சாஹிட், சம்பந்தன்…

கோலாலம்பூர் – ஆளும் கட்சியாக தேசிய முன்னணி வலுவுடன் திகழ்ந்து வந்த காலகட்டங்களில் மஇகாவில் பல தருணங்களில் ஏற்பட்ட அரசியல் போராட்டங்களினால் புதிய இந்தியர் கட்சிகள் தோற்றம் கண்டிருக்கின்றன. எனினும் அந்தக் கட்சிகளெல்லாம் தொடர்ந்து தேசிய முன்னணிக்கே ஆதரவு தந்து வந்தன.

அவற்றுள் ஒன்று அமரர் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதனால் தொடங்கப்பட்ட ஐபிஎப் கட்சி.

ஐபிஎப் உள்ளிட்ட அந்தக் கட்சிகளின் ஆதரவை ஏற்றுக் கொண்டு அவற்றுடன் தேசிய முன்னணி இணக்கமாக செயல்பட்டாலும், இந்த இந்தியர் கட்சிகளை இறுதிவரை கூட்டணியில் மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் தேசிய முன்னணியின் தலைமைத்துவம் தவிர்த்து வந்தது.

#TamilSchoolmychoice

அதிலும், மஇகா இன்னொரு இந்தியர் கட்சி தேசிய முன்னணிக்கு சேர்க்கப்படுவதற்கு எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

ஆனால் தற்போது தேசிய முன்னணியின் பல கட்சிகள் பிரிந்து போய்விட்ட நிலையில், தேசிய முன்னணி என்பது அம்னோ, மசீச, மஇகா மூன்று மட்டுமே இணைந்த கூட்டணி என்றாகி விட்ட நிலையில், ஐபிஎப் இனி தேசிய முன்னணியில் அதிகாரபூர்வமாக இணைத்துக் கொள்ளப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 16) நடைபெற்ற ஐபிஎப் ஆண்டு மாநாட்டில் உரையாற்றிய ஐபிஎப் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் எதிர்வரும் காலங்களில்  தேசிய முன்னணி சார்பாகப் போட்டியிட ஐபிஎப் கட்சிக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தேசிய முன்னணி கூட்டணியில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால், தாங்கள் சுயேச்சையாகப் போட்டியிடுவோம் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்.

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி நேற்றைய ஐபிஎப் மாநாட்டை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

தேசிய முன்னணியுடன் இணைந்திருக்கும் கட்சிகள் தொடர்ந்து அரசியல் களத்தில் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்றும் சாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய முன்னணியின் பலத்தைக் கூட்ட, இனி ஐபிஎப் போன்ற கட்சிகளை இணைத்துக் கொள்ளும் முடிவை தேசிய முன்னணி எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் அம்னோவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய மாட்டோம் என மஇகா தலைமைத்துவம் அதிரடியாக அறிவித்திருக்கும் நிலையில், அந்த இடத்தை நிரப்ப ஐபிஎப் முன்வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎப் போன்ற கட்சிகள் இணைத்துக் கொள்ளப்பட்டால், மஇகா தொடர்ந்து தேசிய முன்னணியில் நீடிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

இதுவரையில் வேறு எந்த இந்தியர் கட்சியையும் தேசிய முன்னணியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்துவந்தது மஇகா. ஆனால், தற்போது ஆட்சியை இழந்து, தோழமைக் கட்சிகள் கைவிட்டுப் பிரிந்திருக்கும் நிலையில் இனியும் தனது நிலைப்பாட்டில் அதே பிடிவாதத்தை மஇகா கடைப்பிடிக்குமா அல்லது விட்டுக் கொடுக்குமா என்பதும் இனிமேல்தான் தெரிய வரும்.

இந்தியர்கள் வாக்குகளைப் பெறுவதில் தேசிய முன்னணி தோல்வியடைந்ததற்கு மஇகாவும் ஒரு காரணமாக அரசியல் பார்வையாளர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. எனவே, இனி மற்ற இந்தியர் கட்சிகளை சேர்த்துக் கொள்ளப்பட தேசிய முன்னணி தலைமைத்துவம் முன்வந்தால், அதனை மறுக்கும், எதிர்க்கும் வலிமை இன்னும் மஇகாவுக்கு இருக்கிறதா என்பதும் எழுகின்ற இன்னொரு கேள்வி!

-இரா.முத்தரசன்

(படங்கள்: நன்றி – டத்தோ எம்.சம்பந்தன் முகநூல் பக்கம்)