கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்ற மறைந்த மலேசிய எழுத்துலகப் பிரபலங்கள் எம்.துரைராஜ் மற்றும் ஆதி.இராஜகுமாரன் ஆகிய இருவருக்குமான நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவர்கள் இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள், எழுத்தாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
உதயம், இதயம் ஆகிய பத்திரிக்கைகளின் ஆசிரியராக இருந்து மிக நீண்ட காலப் பத்திரிக்கையாளராக இருந்து புகழ் பெற்றவரும், அனைவராலும் பிதாமகர் என அன்புடன் அழைக்கப்பட்டவருமான எம்.துரைராஜ் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி காலமானார்.
அவரைத் தொடர்ந்து நயனம் பத்திரிக்கையின் ஆசிரியரும், மக்கள் ஓசை நாளிதழின் பங்குதாரருமான ஆதி.இராஜகுமாரன் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி காலமானார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதோடு, துரைராஜைத் தனது பத்திரிக்கையுலக குருவாகவும் இராஜகுமாரன் இறுதி வரை மதித்தார்.
மறைந்த அவர்கள் இருவரின் எழுத்துலகப் பணிகளையும், பங்களிப்பையும் நினைவு கூரும் விதமாக இன்றைய நினைவேந்தல் நிகழ்ச்சியை மலேசிய பாரதி தமிழ் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
இருவருக்கும் நெருக்கமான எழுத்துலக நண்பர்கள், நெருங்கிப் பழகியவர்கள் இருவர் குறித்த இனிய நினைவுகளை நினைவேந்தல் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர். குடும்ப உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மறைந்த இருவரின் புகைப்படங்களுக்கும் மலரஞ்சலி செலுத்தினர்.
துரைராஜ், இராஜகுமாரன் குறித்து நினைவஞ்சலி உரையாற்றியவர்களில் உமா பதிப்பக உரிமையாளர் டத்தோ சோதிநாதன், வழக்கறிஞர் எம்.மதியழகன், பாரதி தமிழ் மன்றத் தலைவர் ஆர்.தியாகராஜன், செயலாளர் பார்த்தசாரதி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், செல்லியல் இணைய ஊடக நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் ஆகியோரும் அடங்குவர்.