நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுப் பேரவையில் கலந்து கொள்ள செல்லும் வழியில் இலண்டன் வந்தடைந்துள்ள மகாதீர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமியக் கல்வித் துறையில் அமைந்துள்ள மலேசியா மாநாட்டு அரங்கில் தனது உரையை வழங்குவார்.
“முஸ்லீம் உலகில் சிறந்த நிர்வாகத்தை வழங்குவதில் ஏற்படும் சவால்கள்” (The Challenge of Good Governance in the Muslim World) என்ற தலைப்பில் மகாதீரின் உரை அமைந்திருக்கும்.
மலேசியாவின் 7-வது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மேற்கத்திய நாடொன்றில் மகாதீர் நிகழ்த்தவிருக்கும் முதல் பேருரையாக அவரது ஆக்ஸ்போர்ட் உரை திகழும். மகாதீரின் உரையைக் கேட்க அதிகமானோர் ஆர்வம் காட்டுவதால், அரங்கில் அமர்ந்திருப்பவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் அவரது உரையைக் கேட்கும் வண்ணம், அடுத்து அமைந்திருக்கும் மண்டபத்திலும் அவரது உரை நேரலையாக ஒளிபரப்பாகும் என ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய கல்வி மையம் அறிவித்திருக்கிறது.
1985-இல் நிர்மாணிக்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய கல்வி மையத்தில் விரிவுரைகளுக்கான பல்வேறு மாநாட்டு அரங்குகளில் மலேசியாவின் ஆதரவில் அமைக்கப்பட்டிருக்கும் மலேசியா அரங்கும் (Malaysia auditorium) ஒன்றாகும்.
இதற்கு முன்னர் மலேசியாவின் 4-வது பிரதமராக பதவி வகித்த காலகட்டத்தில் இதே இஸ்லாமியக் கல்வி மையத்திற்கு 1996-ஆம் ஆண்டில் முதன் முறையாக வருகை தந்த மகாதீர் அப்போது, “இஸ்லாம் – தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மதம்” என்ற தலைப்பிலான புகழ்பெற்ற உரையொன்றை நிகழ்த்தினார்.
நேற்று சனிக்கிழமை காலை இலண்டன் வந்தடைந்த மகாதீர், தனது நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 25) நியூயார்க் புறப்பட்டு செல்வார். அதன்பின்னர் தனது நியூயார்க் வருகையை முடித்துக் கொண்டு மீண்டும் சனிக்கிழமை (செப்டம்பர் 29) இலண்டன் வந்தடைந்து தனக்கான நிகழ்ச்சிகளைத் தொடர்வார்.