வாஷிங்டன் – இன்ஸ்டாகிராம் நிறுவனத்தைத் தோற்றுவித்த கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் கிரிகெர் இருவரும் பேஸ்புக் நிறுவனத்திலிருந்து விலகியுள்ளது, ஏற்கனவே பேஸ்புக் சந்தித்துவரும் பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே புதிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் என்பது புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் குறுஞ்செயலியாகும். குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த குறுஞ்செயலியை பேஸ்புக் நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு 2012-இல் வாங்கியது.
எனினும், இன்ஸ்டாகிராமை பேஸ்புக்குடன் இணைக்காமல், தனியாகவே இயங்கும் வண்ணம் செயல்படுத்த நினைத்த பேஸ்புக், அதற்காக, இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தோற்றுநர்களான கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் கிரிகெர் இருவரையும் தக்க வைத்துக் கொண்டு அவர்களைக் கொண்டே இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை நடத்தி வந்தது.
ஆனால் தற்போது அவர்கள் இருவரும் விலகியுள்ளனர். அதற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. எனினும் பேஸ்புக் உரிமையாளர் மார்க் சர்க்கர்பெர்க்குடனான கருத்து வேறுபாடுகள் காரணமாகவே அவர்கள் விலகுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூன் மாதம் வரையில் ஏறத்தாழ 1 பில்லியன் பயனர்களைக் கொண்டிருக்கும் இன்ஸ்டாகிராம் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை விளம்பரங்கள் மூலம் 2019-ஆம் ஆண்டுக்குள் ஈட்டும் எனவும் சந்தை ஆய்வுகள் கணித்திருக்கின்றன.
பேஸ்புக்கின் கட்டுப்பாட்டில் இருக்கும் இன்ஸ்டாகிராமிலிருந்து விலகிய பின்னர் சிறிது காலம் ஓய்வெடுத்து விட்டு பின்னர் தங்களின் தொழில்நுட்ப தேடுதலையும், படைப்பாற்றல் திறனையும் மீண்டும் ஒருமுறை சோதித்துப் பார்க்க விரும்புவதாகவும் அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.