Home நாடு செடிக் : என்.எஸ்.இராஜேந்திரன் பதவி ஓய்வு பெற்றார்

செடிக் : என்.எஸ்.இராஜேந்திரன் பதவி ஓய்வு பெற்றார்

1434
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – இன்று அக்டோபர் 11-ஆம் தேதியுடன் செடிக் எனப்படும் பிரதமர் துறையின் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் (SEDIC) தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ்.இராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

“கடந்த ஆறரை ஆண்டுகளாக பிரதமர் துறையில் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டிற்கும் சேவையாற்றியதன் வழி இந்திய சமூகத்தின் தொடர் மேம்பாட்டிற்கு அடியேனால் இயன்ற உண்மையான சேவையை வழங்க முடிந்த மனநிறைவோடும், விலைமதிக்க முடியாத புது அனுபவங்களையும் பெற்று விடைபெறுகிறேன்” என்று இராஜேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

“கடந்த 2012-ஆம் ஆண்டு மே திங்கள் மலேசிய தமிழ்ப் பள்ளியின் மேம்பாட்டுத் திட்ட வரைவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு, தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு மே திங்கள் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டு, பணியைத் தொடர்ந்தேன். கடந்த 2017-ஆம் ஆண்டு மே திங்களில் செடிக்கின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டு, பணியைத் தொடரும் வாய்ப்பு கிட்டியது” என்றும் அந்த அறிக்கையில் இராஜேந்திரன் தனது கடந்த கால பணி நியமனங்கள் குறித்து விவரித்தார்.

#TamilSchoolmychoice

“இந்த ஆறரை ஆண்டுகால பயணத்தை மேற்கொள்ள அருள்புரிந்த எல்லாம் வல்ல இறைவனுக்கும், வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அரசாங்கத்திற்கும் இவ்வேளையில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வேளையில் அடியேனுக்கு வழிகாட்டலையும் ஒத்துழைப்பையும் பெரிய அளவில் வழங்கிய அனைத்து சாராருக்கும் அடியேனின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் குறிப்பாக கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், அடியேனோடு செடிக்கிலும் அதன் தொடர்புடைய அமைப்புகளிலும் பணியாற்றிய அதிகாரிகள், திட்டங்களை மேற்கொள்ள உதவிய தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு சாரா இயக்கப் பொறுப்பாளர்கள், ஊடகப் பொறுப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் இராஜேந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் கல்வி உலகத்திற்கே மீண்டும் திரும்ப எண்ணம் கொண்டிருப்பதாகவும் இராஜேந்திரன் தெரிவித்தார். செடிக் அமைப்பின் பொறுப்புகளை ஏற்பதற்கு முன்னால், உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இராஜேந்திரன் பணியாற்றினார். ஒரு முன்னாள் தமிழ்ப் பள்ளி மாணவரான இராஜேந்திரன், கல்வித் துறையிலும், தமிழ்க் கல்வி, மற்றும் தமிழ்ப் பள்ளிகள் மீதான அனுபவங்கள், ஆர்வம் ஆகியவை காரணமாக அப்போதைய பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்களால் செடிக் அமைப்பில் பணிக்கு அமர்த்தப்பட்டார்.

இதற்கிடையில் இராஜேந்திரனின் கடந்த கால சேவைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் துறையின் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.