Home நாடு போர்ட்டிக்சன் நேரடிப் பார்வை (3) : “80 % இந்தியர் வாக்குகள் அன்வாருக்குக் கிடைக்கும்” –...

போர்ட்டிக்சன் நேரடிப் பார்வை (3) : “80 % இந்தியர் வாக்குகள் அன்வாருக்குக் கிடைக்கும்” – இரவி கணிக்கிறார்!

967
0
SHARE
Ad

போர்ட்டிக்சன் – (சனிக்கிழமை அக்டோபர் 13-ஆம் தேதி நடைபெறும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் குறித்த நிலவரங்களை நேரடிப் பார்வையாக வழங்கும் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன், அந்த இடைத் தேர்தலில் தீவிரக் களப்பணியாற்றி வரும் போர்ட்டிக்சன் சட்டமன்ற உறுப்பினர் இரவி முனுசாமியுடன் (படம்) நடத்திய நேர்காணலின் வழியாக அந்த இடைத் தேர்தல் குறித்த மேலும் சில நிலவரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்)

“போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் இங்குள்ள 22 விழுக்காடு இந்தியர் வாக்குகளில் சுமார் 80 விழுக்காடு நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் அன்வார் இப்ராகிமுக்கு உறுதியாகக் கிடைக்கும்” என அடித்துக் கூறுகிறார் போர்ட்டிக்சன் சட்டமன்ற உறுப்பினரான பிகேஆர் கட்சியின் எம்.இரவி.

இரவியின் கூற்றை ஏதோ ஒரு கட்சி ஆதரவாளரின் ஒரு சார்புக் குரல் என நாம் அப்படியே ஒதுக்கித் தள்ள முடியாது. அதற்குக் காரணமும் இருக்கிறது.

#TamilSchoolmychoice

பிகேஆர் கட்சியில் 1998 முதல் இணைந்து அன்வார் இப்ராகிமின் தீவிர ஆதரவாளராக வலம் வந்து கொண்டிருந்த இரவிக்கு திடீரென இறுதி நேரத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் வந்தமைந்த ஒரு வாய்ப்பின் மூலம் முதன் முறையாக 2008 பொதுத் தேர்தலில் போர்ட்டிக்சன் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டார் அவர்.

அப்போது போர்ட்டிக்சன் சட்டமன்றத்தின் நடப்பு உறுப்பினராக இருந்தவர் மஇகா நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைவராக இருந்த அமரர் வழக்கறிஞர் இராஜகோபால். 2004-இல் போர்ட்டிக்சன் சட்டமன்ற உறுப்பினராக மஇகா-தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டு வென்று நெகிரி மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் இருந்த இராஜகோபால் மீண்டும் 2008-இல் போட்டியிட, அவரை எதிர்த்து பிகேஆர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் இரவி. உள்ளூர்க்காரரான இரவி, போர்ட்டிக்சன் மக்களின் பரவலான ஆதரவுடன் அந்தத் தேர்தலில் இராஜகோபாலுவைத் தோற்கடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

சீன ஆலயம் ஒன்றில் அன்வாரின் பிரச்சாரம்

அப்போது முதல், 2008, 2013, 2018 என வரிசையாக மூன்று பொதுத் தேர்தல்களிலும் போர்ட்டிக்சன் சட்டமன்றத்தை வெற்றிகரமாகத் தற்காத்து வருகிறார் இரவி.

அன்வாரின் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து அனைத்து பிரச்சாரக் கூட்டங்களிலும் குறிப்பாக போர்ட்டிக்சன் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் பிரச்சாரங்களிலும், இந்தியர்களுடனான பிரச்சாரங்களிலும் முன் நிற்பவர் இரவிதான்.

அதனால்தான் 80 விழுக்காடு இந்திய வாக்குகள் அன்வாருக்குக் கிடைக்கும் என்ற அவரது கூற்றை சாதாரணமாகப் புறந்தள்ளிவிட முடியாது.

போர்ட்டிக்சனில் ஒரு மதிய வேளையில் கிடைத்த சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் நம்முடன் அமர்ந்து கலகலப்பாக உரையாடி போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் குறித்த நிலவரங்களை செல்லியல் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொண்டார் இரவி.

தான் அரசியலுக்கு வந்த விதத்தையும், ஆரம்பத்தில் கிடைத்த அனுபவங்களையும் அவர் நகைச்சுவைத் ததும்ப விவரிப்பதைக் கேட்டால் ஒரு நாவலே எழுதலாம். அந்த அளவுக்கு சுவாரசியம் கொட்டிக் கிடக்கிறது அவரது கடந்த அரசியல் பயணக் கதைகளில்!

இந்தியர்கள் ஏன் அன்வாரை ஆதரிக்கிறார்கள்?

அன்வாருடன் நிகழ்ச்சி ஒன்றில் இரவி மற்றும் டேனியல் பாலகோபால் அப்துல்லா

“அன்வார் போர்ட்டிக்சன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது இங்குள்ள இந்தியர்களிடையே நிறைய அதிருப்திகள் நிலவியது என்பது உண்மைதான். காரணம், இந்தியர் ஒருவரை (டேன்யல் பாலகோபால் அப்துல்லா) நாடாளுமன்ற உறுப்பினராகக் கொண்டிருந்த போர்ட்டிக்சன் தொகுதியில் அவரை இராஜினாமா செய்ய வைத்து விட்டு அன்வார் போட்டியிடுகிறார் என்பதால் இங்குள்ள இந்திய வாக்காளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். ஆனால் பிரச்சாரம் தொடங்கியது முதல், நாட்டு அரசியலை இன ரீதியாகப் பார்க்கப்படும் முறையை நாம் மாற்றியமைக்க வேண்டும் எனவும், அன்வார் போன்ற ஆளுமை மிக்க எதிர்காலப் பிரதமராகப் பார்க்கப்படும் ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் அதனால் கிடைக்கக் கூடிய பயன்கள் குறித்தும் நாங்கள் விரிவாக விளக்கி வருகிறோம். அதன் பயனாக போர்ட்டிக்சன் இந்திய வாக்காளர்களிடையே பெரும் மனமாற்றம் தென்படுகிறது. அன்வாரை ஆதரிப்பதாலும், அவரையே அடுத்த போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராகக் கொண்டுவருவதன் மூலமும் தொகுதிக்கும், குறிப்பாக இந்தியர்களுக்கும் கிடைக்கக் கூடிய நன்மைகள் நமது இந்தியர்களின் மனங்களில் பதியத் தொடங்கியிருக்கின்றன” என மனம் விட்டுப் பேசுகிறார் இரவி.

அன்வாருடன் பிரச்சாரத்தில் இணைந்த லிம் கிட் சியாங்

அதேவேளையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி விலகிய டேன்யல் பாலகோபால் அப்துல்லாவும் தொடர்ந்து அன்வாருக்காகப் பிரச்சாரம் செய்து வருவதும், அன்வார் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராகும்போது அவருக்கு தொகுதி பிரதிநிதியாக டேன்யல் பாலகோபால் நியமிக்கப்படுவார் என்பதாலும், இந்திய வாக்காளர்களிடையே அன்வாருக்குத் தற்போது கூடுதலான ஆதரவு கிடைத்து வருகிறது.

அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கும் கைத்தொலைபேசி அழைப்புகளுக்கிடையில் இரவி போர்ட்டிக்சன் இந்தியர் வாக்குகள் குறித்து மேலும் சில விவரங்கள் தெரிவித்தார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் அன்வார் – மகாதீர் – போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில்…

“நெகிரி மாநிலத்தில் பிகேஆர் கட்சி வலுவுடன் திகழ்வதற்கு முக்கியக் காரணம் போர்ட்டிக்சன் தொகுதிதான். 2008 முதல் போர்ட்டிக்சன் (முன்பு தெலுக் கெமாங் என்ற பெயர் கொண்ட நாடாளுமன்றம்) நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளை பிகேஆர் வெற்றிகரமாகத் தற்காத்து வந்திருக்கிறது. எனினும், இங்கே நிறைய பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இந்தியர்களுக்கு கல்வியும், போதிய வேலைவாய்ப்பும் கிடைத்தால் யாருடைய தயவும் இல்லாமல் அவர்கள் முன்னேறி விடுவார்கள் என்பது எனது முடிவு. அன்வார் போன்ற பிரபலத் தலைவர் ஒருவர் இங்கே நாடாளுமன்ற உறுப்பினராக வருவதன் மூலம் கிடைக்கக் கூடிய அனுகூலங்களை இந்தியர்கள் உணர்ந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இப்போதே மூன்று பெரிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதன்  மூலம் உள்ளூர் மக்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அந்த வாய்ப்புகள் இந்தியர்களுக்கும் போய்ச்சேரும்” என்கிறார் இரவி.

பழங்குடி இன மக்களுடன் அன்வார்…

“மேலும் இங்குள்ள தோட்டங்கள் மற்றும் அதன் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதாகவும் அன்வார் உறுதியளித்திருக்கிறார். போர்ட்டிக்சன் மக்கள் அனைவருக்கும் கல்வி வாய்ப்பு கிடைக்கும் வண்ணம் இணையம் வழியான இலவசக் கல்வியையும் (டியூஷன்) தொடக்கியிருக்கிறார். இவையெல்லாம் இந்தியர்கள் வாக்குகள் அன்வாருக்கே கிடைக்கும் என்பதற்கான காரணங்கள்” என அடுக்குகிறார் இரவி.

போர்ட்டிக்சன் தொகுதி பிரச்சாரங்கள் குறித்து மறு ஆய்வு செய்ய அன்வார் இப்ராகிம் தலைமையிலான தொகுதியிலுள்ள நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களின் சந்திப்புக் கூட்டத்திற்கான நேரம் நெருங்கி விட நம்மிடம் இருந்து விடைபெற்றுச் சென்றார் இரவி.

இந்தியர் வாக்குகள் அன்வாருக்குக் கிடைக்கும் என்பதற்கான வேறு சில காரணங்கள்

அன்வாருக்கு எதிராக சதி செய்கிறார் என்று சொல்லப்பட்ட துன் டாயிம் சைனுடின் நேரடியாக அன்வாருக்கு ஆதரவாகப் பிரச்சாரம்

போர்ட்டிக்சன் தொகுதியில் தேசிய முன்னணி போட்டியிடாததால், இந்த முறை மஇகா கிளைகளும் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டிருக்கின்றன. இதனாலும், இந்தியர்களின் வாக்குகள் வேறுவழியின்றி அன்வாருக்கே திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல், அண்மையில் மஇகாவிலிருந்து விலகிய மஇகாவின் முன்னாள் உதவித் தலைவரும், போர்ட்டிக்சன் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ எஸ்.சோதிநாதனும் அன்வாருக்காகத் தீவிரமாக தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகின்றார். போர்ட்டிக்சனில் பிறந்து வளர்ந்தவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மஇகாவினருடன் அணுக்கமானத் தொடர்புகளைக் கொண்டிருந்தவர் என்ற முறையில் அவராலும் கணிசமான இந்திய வாக்குகளை அன்வாருக்கு ஆதரவாகத் திசை திருப்ப முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனைவியும், துணைப் பிரதமருமான வான் அசிசாவின் பிரச்சாரம்…

சுயேச்சை வேட்பாளர் முகமட் இசா சமாட்டுக்கு இந்தியர்களிடையே நிறைய செல்வாக்கு இருக்கிறது என்றாலும், எப்போதும் தேசிய முன்னணியோடு இணைத்துப் பார்க்கப்பட்ட அவர் தற்போது அம்னோவிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிடுவது அவரது ஆதரவுத் தளத்தை சிதைத்திருக்கிறது. அன்வாரை அவரால் வெல்ல முடியாது என்ற எண்ணம் பரவிக் கிடப்பதும், அப்படியே இசா சமாட்  வென்றாலும் தொகுதியில் அவரால் என்ன செய்து விட முடியும் என்ற அவநம்பிக்கை நிலவுவதும் அவருக்குப் பின்னடைவான அம்சங்கள்.

பாஸ் கட்சிக்கும் இந்தியர்களுக்குமான உறவு பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இந்தியர்கள் எப்போதுமே பாஸ் கட்சியை ஆதரித்ததில்லை. அதுவும் இதுபோன்ற ஓர் இடைத் தேர்தலில் அன்வாருக்கு எதிராக பாஸ் கட்சிக்கு ஆதரவளிக்க இந்தியர்கள் ஒருபோதும் முன்வர மாட்டார்கள்.

அமைச்சர் கோபிந்த் சிங் அன்வாருடன் பிரச்சாரம்

சுயேச்சை வேட்பாளர்களில் இந்தியர்கள் யாருமில்லை என்பதால் அந்த வகையிலும் இந்திய வாக்குகள் சிதற வாய்ப்பில்லை.

75,770 பதிவு பெற்ற மொத்த வாக்காளர்களில் சுமார் 22 விழுக்காட்டினர் இந்தியர்கள். அதாவது சுமார் 16 ஆயிரம் பேர்.

நாம் முன்பே கூறியபடி, போர்ட்டிக்சனில் அன்வார் வெல்வது என்பது உறுதியாகிவிட்ட நிலையில், இப்போது எழுந்திருக்கும் கேள்விகள், எத்தனை விழுக்காட்டினர் வாக்களிக்க வரப் போகிறார்கள் என்பதும், அன்வார் எத்தனை வாக்குகள் பெரும்பான்மையில் வெல்வார் என்பதும்தான்.

எப்படிப் பார்த்தாலும், அன்வாருக்கான வெற்றியில் போர்ட்டிக்சன் இந்திய வாக்காளர்களின் பங்கும் கணிசமாக இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

-இரா.முத்தரசன்

தொடர்புடைய முந்தைய கட்டுரைகள்:

போர்ட்டிக்சன் நேரடிப் பார்வை (1) : விறுவிறுப்பில்லாத இடைத் தேர்தலில் சுறுசுறுப்பான அன்வார்!

போர்ட்டிக்சன் நேரடிப் பார்வை (2) : அன்வாருக்கு அடுத்த நிலையில் வருவாரா இசா சமாட்?