சென்னை – ஒவ்வொரு முறையும் ஒரு திரைப்படம் வெளிவந்து வெற்றி பெறும்போதும் அந்தப் படத்தின் கதை – மூலக் கதை – குறித்த உரிமைக் கோரல்கள் உரத்து ஒலிப்பது வழக்கமான ஒன்று.
அண்மையில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘96’ படத்துக்கும் இதே நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
சி. பிரேம்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றிருக்கும் திரைப்படம் “96”. இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நேரத்தில், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரியும் சுரேஷ் என்பவரின் கதையை திருடி படமாக்கிவிட்டனர் என்று படக்குழுவினர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
சமீப காலமாக வெற்றி பெற்ற திரைப்படங்களின் கதைகளை வேறு சிலர் உரிமை கொண்டாடுவது திரையுலகில் நடந்து வரும் ஒன்று என்றாலும், சில நேரங்களில் இதில் ஓரளவுக்கு உண்மை இருப்பதும் மறுக்க முடியாத ஒன்றாகும்.
பாரதிராஜாவின் உதவி இயக்குனரான சுரேஷ், ”பாரதி எனும் பால் பாண்டி, ‘92 ” எனும் கதையை சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் தயார் செய்து, தானே சொந்தமாக இயக்குவதற்காக வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில் 96 திரைப்படத்தின் கதை விவாதத்தில் இருந்த ஒரு முக்கிய இயக்குனரிடம் இந்த கதையை ஒரு முறை கூறியிருந்ததாகவும், அவர்தான் இந்தக் கதையை ‘96’ பிரேமிடம் சேர்த்திருக்க வேண்டும் என்று நம்புவதாகவும் சுரேஷ் தனது நெருங்கிய வட்டாரத்தில் கூறியிருக்கிறார்.
தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கோர்த்து திரைக்கதையை எழுதி, தாம் இயக்குவதற்காக பல ஆண்டுகள் முயற்சியில் இருந்திருக்கிறார் சுரேஷ். இந்நிலையில் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கதை இயக்குனர் பாரதிராஜாவிடம் சொல்லப்பட்டு, பாரதிராஜாவே இயக்குவதற்கான சில முயற்சிகளும் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக அந்த படம் தள்ளிப்போனது.
இந்தப் பிரச்சனை, இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பார்வைக்கு செல்ல, அவர் அலுவலகத்தில் சில முக்கிய பிரபலங்கள் சங்கமித்து இந்த பிரச்சனையை பற்றி விவாதித்திருப்பதாகவும், 96 திரைப்படத்தின் தயாரிப்பாளரான, மெட்ராஸ் எண்டர்ப்ரைஸ் நந்தகோபால் பாரதிராஜாவை இது விஷயமாக சந்தித்திருப்பதாகவும் சில தகவல்கள் கசிந்திருக்கின்றன.
தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை பற்றி ‘96’ படத்தின் இயக்குனர் பிரேம் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.