வாஷிங்டன் – சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கியிலுள்ள சவுதி அரேபியத் தூதரகத்தின் உள்ளே கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார் என்றும் முதல் கட்டமாக அவரது கைவிரல்கள் துண்டிக்கப்பட்டன என்றும் புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து சவுதி அரேபியா – அமெரிக்கா இடையிலான தூதரக உறவில் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சல்மான் மீது எந்தத் தவறும் இல்லை என்ற நோக்கில் பொருத்தமான அறிக்கையைத் தயாரிக்க அமெரிக்காவும் சவுதியும் முயற்சி செய்து வருகின்றன என்றும் அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
கஷோகி கொல்லப்பட்டது தொடர்பில் அமெரிக்காவில் கடும் கண்டனங்கள் ஊடகங்கள் மத்தியில் எழுந்துள்ளன.
கஷோகி கொலை தொடர்பில் அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளை அமெரிக்க ஊடகங்கள் கடுமையாகச் சாடியிருக்கின்றன.
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் கட்டுரைகள் எழுதும் நிருபரும் சவுதி அரேபியாவுக்கு எதிராக எப்போதும் எழுதி வந்திருப்பவருமான ஜமால் கஷோகி தனது துருக்கியக் காதலியை மணப்பது குறித்த ஆவணங்களைப் பெறுவதற்காக கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் நுழைந்தார். அவர் அந்தத் தூதரகத்தில் நுழைந்ததற்கான ஆதாரமாக புகைப்படங்கள் இருக்கின்றனவே தவிர இதுவரையில் அவர் என்ன ஆனார் என்பது குறித்த தகவல்கள் இல்லை. இதுவரையில் அவர் அந்தத் தூதரகத்தில் இருந்து வெளியே வரவில்லை.
சவுதி தூதரகத்தில் கஷோகி தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, அவரைக் ‘கடுமையாக’ விசாரித்த அதிகாரிகளின் தகாத நடவடிக்கையால் அவர் மரணமடைய நேர்ந்தது என நம்பப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கல் போம்பியோவும் சவுதி அரேபியா சென்று சவுதி இளவரசரும் சவுதி அரேபியாவின் ஆட்சியாளருமான சல்மானைச் சந்தித்து ஜமால் கஷோகி விவகாரம் குறித்து விவாதித்திருக்கிறார். சவுதி மன்னரையும் போம்பியோ சந்தித்தார்.
கஷோகி கொல்லப்பட்டது நிரூபணமானால் சவுதி அரேபியா மீது கடும் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால் தற்போது அவர் பின்வாங்குகிறார் என அமெரிக்க ஊடகங்கள் சாடி வருகின்றன.
இதற்கிடையில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் நிருபரான கஷோகி எழுதிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கும் அந்தப் பத்திரிக்கை, கஷோகியின் கடைசிக் கட்டுரை இது எனக் கூறி அந்தக் கட்டுரையைப் பிரசுரித்துள்ளது.