புத்ரா ஜெயா – நேற்று வியாழக்கிழமை பிற்பகலில் புத்ரா ஜெயா ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு விசாரணைக்காக வந்தடைந்த டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இன்று காலையில் அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படும் வேளையில், அவருக்கு ஆதரவாக சுமார் 200 பேர் கொண்ட குழுவினர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன் திரண்டனர்.
சாஹிட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதும் அம்னோவின் ஒற்றுமையைக் காட்டுவதும் தங்களின் நோக்கம் என இந்தக் குழுவுக்குத் தலைமையேற்ற மலேசியா பாரு கண்காணிப்புக் குழுவின் தலைவரும், அம்னோ மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ லோக்மான் நூர் அடாம் கூறினார்.
நேற்று இரவு 8.00 மணி முதல் இந்தக் குழுவினர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன் திரளத் தொடங்கினர். ‘Lokap SPRM’ என்ற வார்த்தைகளைக் கொண்ட ஆரஞ்சு நிற டி-சட்டைகளை அவர்கள் அணிந்திருந்தனர்.
இந்தக் குழுவில் சாஹிட் ஹமிடியின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ஹமிடா காமிஸ் மற்றும் சாஹிட்டின் மகள் டத்தோ நுருல் ஹிடாயா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.