Home நாடு பினாங்கு நிலச் சரிவு : 8-வது சடலம் கண்டெடுக்கப்பட்டது

பினாங்கு நிலச் சரிவு : 8-வது சடலம் கண்டெடுக்கப்பட்டது

993
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தின் பாயா தெருபோங் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 19) நிகழ்ந்த நிலச் சரிவில் புதையுண்டவர்களைத் தேடும் பணி தொடர்ந்து வரும் நிலையில் இன்று 8-வது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்தோனிசியரான சுபேரி என்ற 34 வயது நபர்தான் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 8-வது நபர் என அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.

நிலச்சரிவினால் ஏற்பட்ட குப்பை கூளங்களை இராட்சத இயந்திரங்களைக் கொண்டு மீட்புப் படையினர் அகற்ற முற்பட்டபோது சுபேரியின் சடலம் காணப்பட்டது. அவரது மனைவி நோராசிசா என்ற 24 வயது கம்போடியப் பெண்மணி இந்த நிலச்சரிவில் காயமடைந்திருந்தார். பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சுபேரியின் சடலத்தை அவரது மனைவி அடையாளம் காட்டினார்.

நோராசிசா அந்த நிலச் சரிவில் இடுப்பு வரையில் புதையுண்டார். அவரது கணவர் சுபேரி நோராசிசா கண்முன்னே மண்ணில் புதையுண்டார்.
இன்று பிற்பகல் 2.00 மணிவரையில் 8 சடலங்கள் மீட்புப் படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் மூவர் இந்தோனிசியர், நால்வர் வங்காளதேசத்தினர், ஒருவர் மியான்மார் பெண்மணியாவார்.

#TamilSchoolmychoice

மேலும் வங்காளதேசிகள் என நம்பப்படும் இருவர் இன்னும் புதையுண்டிருக்கின்றனர் என அஞ்சப்படுகிறது.
நால்வர் இந்த நிலச்சரிவில் காயமடைந்தனர். ஒரு வங்காளதேசி, இரண்டு இந்தோனிசிய பெண்மணிகள் மற்றும் கம்போடியப் பெண்மணி ஒருவர் ஆகியோரே அந்த நால்வராவர். காயமடைந்த பெண்மணிகளில் ஒருவர் 4 மாத கர்ப்பிணியாவார்.