புத்ரா ஜெயா – எதிர்வரும் 2019 ஆண்டு முதற்கொண்டு முதலாம் வகுப்பு தொடங்கி, மூன்றாம் வகுப்பு வரை தேர்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அறிவித்துள்ளார்.
தேர்வுகள் இரத்து செய்யப்பட்டு அதற்குப் பதிலாக மாணவர்களின் திறனை பொதுவில் மதிப்பீடு செய்யும் நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
புதிய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மஸ்லீ மாலிக் மலேசியக் கல்வித் திட்டத்தில் பெரிய அளவிலான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படும் வேளையில் தனது சீர்திருத்தங்களைக் கட்டம் கட்டமாக அவர் அறிவித்து வருகிறார்.
அவரது சில அறிவிப்புகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்றாலும், மூன்றாம் வகுப்பு வரையில் தேர்வுகள் இல்லை என்ற அவரது அறிவிப்பு பரவலான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய தேர்வுகள் இல்லாதது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமளவில் மன அழுத்தத்தைக் குறைக்கும் எனக் கருதப்படுவதால் அவரது இந்த அறிவிப்புக்கு பலத்த வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.