கோலாலம்பூர் – அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் 13 தமிழ்ப் பள்ளிகளுக்கு என 39.7 மில்லியன் ரிங்கிட் தேசிய முன்னணி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது என எழுந்துள்ள விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை, முன்னாள் கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் (படம்) தற்காத்துள்ளார்.
நஜிப் பிரதமராக இருந்த காலத்தில் செடிக் (இந்தியர்களுக்கான சமூக-பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு) சமர்ப்பித்த விண்ணப்பத்தின் காரணமாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான கமலநாதன் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.
செடிக்கின் விண்ணப்பத்தைப் பரிசீலித்த நஜிப் 9 ஆகஸ்ட் 2017-ஆம் தேதி அப்போதைய நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ இர்வான் செரிகாருக்கு மேல் நடவடிக்கை எடுக்கக் கடிதம் எழுதினார்.
“பொதுவாக அரசாங்க நடைமுறைப்படி இதுபோன்ற விவகாரங்களில் இதன் பொறுப்பு பிரதமர் துறையின் கீழ் வரும் என்றாலும், இதற்கான நிதி ஒதுக்கீட்டை நிதி அமைச்சுதான் இறுதி முடிவு செய்யும். அதன்படி இந்த விவகாரத்தில் 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 36 மில்லியன் ரிங்கிட் நிதி 22 தமிழ்ப் பள்ளிகளுக்கு பங்கீடு செய்யப்பட முடிவெடுக்கப்பட்டது. மீண்டும் 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியே மீண்டும் வெல்லும் என்ற அடிப்படையில் இந்த பங்கீடு முடிவு எடுக்கப்பட்டது. 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் துறை இலாகாவும், நிதியமைச்சின் புதிய தலைமைச் செயலாளரும் இந்த நிதி ஒதுக்கீட்டுக்கான அங்கீகாரம் வழங்குவதை கவனிக்காமல் விட்டு விட்டார்கள் எனக் கருதுகிறேன்” எனவும் கமலநாதன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்ப் பள்ளிகளின் கட்டமைப்புக்காகவும், மேம்பாட்டுக்காகவும் உண்மையிலேயே அக்கறை செலுத்திய ஒரே பிரதமர் நஜிப் என்றும் தெரிவித்த கமலநாதன், “நஜிப்பின் தலைமைத்துவத்தின் கீழ் 2009 முதல் 2018 வரை ஏறத்தாழ 900 மில்லியன் 524 தமிழ்ப் பள்ளிகளுக்கு செலவிடப்பட்டன” என்றார்.
தேசிய முன்னணி வழங்கிய இந்த நிதி ஒதுக்கீட்டு உறுதி மொழிகளுக்கு நஜிப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆனால் இந்த நிதி ஒதுக்கீடுகள் குறிப்பிட்ட தமிழ்ப் பள்ளிகளைச் சென்றடையவில்லை என்றும் மஸ்லீ மாலிக் நஜிப்பை நேற்று சாடியிருந்தார்.
கடந்த வாரம் மலேசியாகினி ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றில் தேசிய முன்னணி நடத்திய நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பள்ளிகளுக்கு மாதிரி காசோலைகள் மூலம் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன என்றும் எனினும் இதற்கான அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படவில்லை என்றும் கல்வி அமைச்சின் வட்டாரம் ஒன்று தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், உண்மையில் இந்த நிதிகள் தமிழ்ப்பள்ளிகளுக்குச் சென்று சேரவில்லை என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது.