வாஷிங்டன் – அமெரிக்காவின் நீதித் துறை அலுவலகம் (United States Department of Justice) 1எம்டிபி விவகாரம் தொடர்பில் தேடப்படும் குற்றவாளியான லோ தெக் ஜோவையும் மற்றும் மேலும் கோல்ட்மேன் சாச்ஸ் (Goldman Sachs) வங்கியின் இரண்டு அதிகாரிகளையும் நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 1) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியது.
விரிவான இலஞ்ச ஊழல் விவகாரங்கள் அடங்கிய குற்றப் பத்திரிக்கையை அமெரிக்க நீதித் துறை அலுவலகம் சமர்ப்பித்திருக்கிறது.
இதன் தொடர்பில் கோல்ட்மேன் சாச்ஸ் முன்னாள் வங்கியாளரான இங் சோங் ஹூவா மலேசியாவில் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார். மற்றொரு கோல்ட்மேன் சாச்ஸ் அதிகாரி டிம் லெய்ஸ்னெர் குற்றத்தை ஒப்புக் கொண்டு தான் முறைகேடான முறையில் பெற்ற 43.7 மில்லியன் டாலரைத் திரும்பச் செலுத்த ஒப்புக் கொண்டிருக்கிறார்.
மற்றொரு குற்றவாளியாக அமெரிக்க நீதித் துறையால் சேர்க்கப்பட்டிருக்கும் ஜோ லோ பற்றிக் கூறவேண்டியதில்லை. இன்னும் தேடப்படுகிறார்.
கோல்ட்மேன் சாச்ஸ் நிதி ஆலோசனை நிறுவனம் 1எம்டிபி வெளியிட்ட 6 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் உத்தரவாதப் பத்திரங்களை (bonds) கையாண்டது. இந்தக் குத்தகையைப் பெறுவதற்காக கோடிக்கணக்கான பணம் இலஞ்சமாக மலேசிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது என்றும், சந்தை நிலவரத்தை விட அதிகமான விழுக்காடு ஊதியம் கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்றும் அமெரிக்க நீதித் துறை குற்றம் சாட்டியிருக்கிறது.
இதிலிருந்து பெறப்பட்ட பணத்தைக் கொண்டுதான் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோரின் மகன் ரிசா அசிஸ் தயாரிப்பில் “தி வோல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட்” என்ற ஆங்கிலப் படம் தயாரிக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க நீதித் துறை ஏற்கனவே 1எம்டிபி ஊழல் பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்துகளைத் திரும்பப் பெற பொது (சிவில்) வழக்குகளை அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுத்திருக்கிறது. ஆனால், 1எம்டிபி விவகாரம் தொடர்பில் தனிப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் (கிரிமினல்) குற்றச்சாட்டுகள் அமெரிக்க நீதிமன்றத்தில் நேற்றுதான் முதல் முறையாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது.