Home இந்தியா சபரிமலை நடை திறப்பு – பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா?

சபரிமலை நடை திறப்பு – பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா?

829
0
SHARE
Ad

சபரிமலை – அண்மையக் காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் சபரிமலை கோவிலின் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபரிமலை ஆலயத்தைச் சுற்றியுள்ள இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஏற்ப அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கேரளா அரசாங்கம் மும்முரமாக இயங்கி வரும் நிலையில் அந்தப் பகுதிகளில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அந்த வட்டாரங்களில் காவல் துறையினரும் பாதுகாப்புப் படையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சபரிமலைக்கு சென்ற வாகனங்கள் மீது காவல் துறையினர் சோதனைகள் நடத்தினர்.

கடந்த மாதம் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்திய போது தந்திரிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பக்தர்களின் போராட்டம் காரணமாக கடந்த முறை ஆலயம் திறக்கப்பட்டபோது, பெண்கள் ஆலயத்தின் உள்ளே நுழைய முடியவில்லை.

ஆனால், இந்த முறை பெண்கள் அனுமதிக்கப்பட தந்திரிகள் ஒத்துழைப்பார்களாக அல்லது கடந்த முறை எச்சரித்தது போன்று, ஆலயத்தை இழுத்துப் பூட்டி விட்டு செல்வார்களா என்ற கேள்விகளும் பிறந்துள்ளன.

சபரிமலைக்கு செய்திகள் சேகரிக்கப்பட அனுப்பப்படும் பத்திரிக்கையாளர்கள் ஆண்களாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறும், பெண்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பத்திரிக்கை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சபரிமலை தந்திரி அலுவலகத்தில் கைத்தொலைபேசி உரையாடல்களை முடக்கும் வண்ணம் (ஜாமர்) கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தந்திரிகளுடன் தொடர்பு கொள்வதில் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.