சென்னை – சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சர்கார் படவிவகாரத்தில், அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு நேற்றிரவு காவல் துறை அதிகாரிகள் சென்றிருக்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் அவர் வீட்டில் இல்லை. அதைத் தொடர்ந்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
எனினும், முருகதாஸ் மீதான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்வதற்காகத்தான் காவல் துறையினர் அவரைக் காணச் சென்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை (முன் ஜாமீன்) கோரி மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
அந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய காட்சிகள் சர்கார் படத்திலிருந்து நீக்கப்படும் என்றும், கோமளவல்லி என்ற பெயர் குறிப்பிடப்படும் இடங்களில் எல்லாம், ஒலியிழப்பு செய்யப்படும் என்றும் படக்குழு சார்பாக திரையரங்குகளுக்கான சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்திருக்கிறார்.
எனினும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விஜய்யின் பதாகைகளையும், சர்கார் படப் பதாகைகளையும் கிழிக்கும் போராட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
படத்தைத் திரையிடக் கூடாது என திரையரங்குகளுக்கு சென்று அதிமுகவினர் நடத்தும் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.