Home Photo News பழைய காதல் நினைவுகளில் மூழ்கிய மகாதீர் தம்பதியர்

பழைய காதல் நினைவுகளில் மூழ்கிய மகாதீர் தம்பதியர்

1188
0
SHARE
Ad

சிங்கப்பூர் – ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள சிங்கப்பூருக்கு 2 நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் துன் மகாதீருக்கு அங்குள்ள சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம் நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 13) சட்டத் துறையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி மரியாதை செய்தது.

மகாதீரும் அவரது துணைவியார் சித்தி ஹஸ்மாவும் சிங்கப்பூரில் உள்ள கிங் எட்வர்ட் (7) கல்லூரியில் மருத்துவம் பயின்றனர். தற்போது அந்தக் கல்லூரி சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியாக இயங்கி வருகிறது.

சிங்கை தேசியப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் என்ற முறையில் சிங்கை – மலேசியா நாடுகளுக்கிடையில் நல்லுறவுகளை ஏற்படுத்த அவர் பாடுபட்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

சிங்கை அதிபரும், சிங்கை தேசியப் பல்கலைக் கழகத்தின் வேந்தருமான ஹலிமா யாக்கோப் மகாதீருக்கான கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

அதே வேளையில், சித்தி ஹஸ்மாவுக்கும் முன்னாள் மாணவி என்ற முறையில் அவர் ஆற்றிய மக்கள் சேவைகளுக்காக சிங்கை தேசியப் பல்கலைக் கழகம் சிறப்பு விருதை வழங்கி கௌரவித்தது.

கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற பின்னர் தங்களின் பழைய கல்லூரி வளாகத்தைச் சுற்றி வந்த மகாதீர் தம்பதியர் பழைய காதல் நினைவுகளில் மூழ்கினர்.

“இங்குதான் நான் முதன் முதலில் சித்தி ஹஸ்மாவைச் சந்தித்தேன். மீண்டும் இங்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எங்களின் எஞ்சிய காலம் வரை என்றும் நாங்கள் நினைவில் போற்றிப் பாதுகாக்கும் பல இனிய நினைவுகளை இந்த கல்லூரி கொண்டிருக்கின்றது” என மகாதீர் தனது வலைத் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மகாதீரின் கௌரவ டாக்டர் பட்டமளிப்பு மற்றும் அவரும் சித்தி ஹஸ்மாவும் கல்லூரி வளாகத்தைச் சுற்றிப் பார்த்தது தொடர்பான புகைப்படங்களை இங்கே காணலாம்.

(படங்கள் : நன்றி – துன் மகாதீர் வலைத்தளம்)