கோலாலம்பூர் – நாடாளுமன்ற மேலவைத் தலைவரும் மஇகா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிரமுகர்களுக்கான சிறப்பு வளாகத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி குற்றம் சாட்டினார்.
நவம்பர் 14-ஆம் தேதியிட்ட விமான நிலையத்தின் மறைக் காணி காணொளிகளை (சிசிடிவி) வெளியிட்டு நேற்று சனிக்கிழமை (நவம்பர் 17) பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கமளித்த அந்தோணி லோக், அன்றைய தினம் விமான நிலையத்தின் பிரமுகர்கள் பகுதிக்கு வந்த விக்னேஸ்வரன் காலணிகள் அணியாமல், செருப்புகள் (ஸ்லிப்பர்ஸ்) அணிந்திருந்தார் என்றும் அதன் காரணமாக பாதுகாப்பு அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுத்து அவருக்கு உள்ளே நுழைவதற்கான அனுமதிச் சீட்டு வழங்க மறுத்துவிட்டனர் என்றும் தெரிவித்தார்.

“எனினும், விக்னேஸ்வரன் அதனைப் பொருட்படுத்தாமல், சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை கடுமையான வார்த்தைகளால் சாடி விட்டு பிரமுகர்கள் அறைக்குள் நுழைந்து விட்டார். அங்கிருந்த பொது உறவு அதிகாரி பிரமுகர்கள் அறைக்கான உடைகள் குறித்த சுற்றறிக்கையை விக்னேஸ்வரனிடம் காண்பித்தும் அவர் அதற்கு மரியாதை தராமல் செயல்பட்டார். பாதுகாப்பு அனுமதிச் சீட்டு இல்லாமல் பிரமுகர்கள் அறைக்குள் நுழைந்ததற்காக விக்னேஸ்வரன் மீது குற்றம்சாட்டப்படவும் சட்டம் வகை செய்கிறது” என்றும் அந்தோணி லோக் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த தினத்தன்று பணியில் இருந்த பொதுஉறவு அதிகாரி நோராபிசா முகமட் நாசிர், அந்தோணி லோக் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது உடனிருந்தார்.
“விக்னேஸ்வரனுடன் எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. அவரைப் போன்ற அரசாங்க உயர் பதவிகளில் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் என யாராக இருந்தாலும் அரசாங்க நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்” என்றும் அந்தோணி லோக் கூறியுள்ளார்.
அடுத்து:
“அந்தோணி லோக் எனது தரப்பைக் கேட்கவில்லை. அதிகாரிகளே தவறு செய்தனர்” – குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் விக்னேஸ்வரன்!