Home நாடு விக்னேஸ்வரன் விவகாரம் – காவல் துறை விசாரிக்கும்

விக்னேஸ்வரன் விவகாரம் – காவல் துறை விசாரிக்கும்

1280
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த நவம்பர் 14-ஆம் தேதி நாடாளுமன்ற மேலவை அவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் விமான நிலைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார் என்ற விவகாரத்தை இனி காவல் துறை விசாரிக்கும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்தார்.

விமான நிலைய நிர்வாகம் இது குறித்து புகார் ஒன்றை காவல் துறையில் நேற்று சனிக்கிழமை இரவு செய்திருப்பதால், தமது அமைச்சு விசாரணையின் முழு அறிக்கை கிடைக்கும் வரை காத்திருக்கும் என்றும் அந்தோணி லோக் கூறினார்.

“இந்த விவகாரத்தை நீட்டிப்பதிலும், இதன் மூலம் விளம்பரம் தேடுவதிலும் எனக்கு விருப்பமில்லை. எனினும் இதுகுறித்து காவல் துறை புகார் செய்யப்பட்டிருப்பதால் அவர்களின் அறிக்கைக்காகக் காத்திருப்பேன்” என அந்தோணி லோக் இன்று சிரம்பானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்று சனிக்கிழமை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில், நாடாளுமன்ற மேலவைத் தலைவரும் மஇகா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிரமுகர்களுக்கான சிறப்பு வளாகத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார் எனக் குற்றம் சாட்ட, அந்தக் குற்றச்சாட்டுகளை விக்னேஸ்வரன் மறுத்துள்ளார்.

விக்னேஸ்வரன் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்தோணி லோக் தனது பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

“அந்தோணி லோக் இந்த சம்பவத்தை வைத்து மட்டமான விளம்பரம் தேடுகிறார். எனது தரப்பின் விளக்கத்தைக் கூற அவரை நான் தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் கேட்கவில்லை. நான் ஒரு குற்றம் இழைத்திருந்தால் ஏன் அங்கேயே நிறுத்தப்படவில்லை அல்லது கைது செய்யப்படவில்லை?” என்றும் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

நவம்பர் 14-ஆம் தேதி இரவு 10.14 மணிக்கு பிரமுகர்கள் பகுதிக்கு செருப்புகள் அணிந்திருந்த நிலையில் செல்ல முற்பட்டபோது, முறையான உடைகள் அணிந்திருக்கவில்லை என்ற காரணத்தால், அங்கு சேவையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

எனினும், பாதுகாப்பு அதிகாரிகளையும் மீறி விமான நிலையத்தின் புறப்பாடு மையம் (Departure gates) நோக்கி விக்னேஸ்வரன் செல்வதை மறைக்காணி காணொளிகள் (சிசிடிவி கேமரா) காட்டின.

முறையான பாதுகாப்பு பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் விக்னேஸ்வரன் புறப்பாடு மையத்திற்கு சென்றார் என்றும் அந்தோணி லோக் குற்றம் சாட்டியிருந்தார்.

“முதன் முறையாக எனது மகள் பிரிட்டனுக்கு செல்வதால் அவரை வழியனுப்ப நான் விமான நிலையம் சென்றேன். தனது காலில் ஒரு சிறு புண் இருந்ததால் நான் காலணி அணியாமல் செருப்புகள் அணிந்திருந்தேன். நான் பிரமுகர்கள் அறை எதனையும் பயன்படுத்தாமல் நேரடியாக புறப்பாடு மையத்திற்கு சென்றேன்” என்றும் விக்னேஸ்வரன் விளக்கமளித்திருந்தார்.

விமான நிலைய அதிகாரிகளிடம் முறைதவறி நடந்து கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் மறுத்த விக்னேஸ்வரன், “செருப்புகள் அணிந்திருக்கக் கூடாது எனத் தெரிவிக்கும் சுற்றறிக்கையை மட்டுமே நான் காட்டச் சொன்னேன். அந்த சுற்றறிக்கையைப் பார்க்க மட்டுமே நான் விரும்பினேன். ஆனால் அந்த சுற்றறிக்கையில் முறையான ஆடைகள் அணிந்திருக்க வேண்டும் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்தது” என்றும் கூறியிருக்கிறார்.

“நான் தவறு செய்திருந்தால் என்னைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். அதை விடுத்துவிட்டு அந்தோணி லோக் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்போல் நடந்து கொள்ளக்கூடாது. எங்கள் இருவருக்கும் இடையில் தொடர்பு கொண்டு முறையாகப் பேசியிருந்தால் இந்த சர்ச்சையைத் தவிர்த்திருக்கலாம்” என்றும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்திருந்தார்.