Home நாடு சுல்கிப்ளியின் விமர்சனத்தால் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு!

சுல்கிப்ளியின் விமர்சனத்தால் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு!

718
0
SHARE
Ad

sulkifliகோலாலம்பூர், ஏப்ரல் 1- கூலிம்-பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினரான சுல்கிப்ளி நோர்டின் இந்து மத கடவுள்களின் உருவச் சிலைகளை அவமதிக்கும் வகையில் பேசியுள்ள அந்த ஒளி நாடா ‘Chandra Lawan Tetap Lawan’ என்ற பெயரில் சமூக வலைத் தளங்களான யு டியூப் (youtube) மற்றும் முகநூலில் வெளியிடப்பட்டு தற்போது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த 5 நிமிட ஒளி நாடாவில், இந்து கடவுள்களின் சிலைகளை விற்பனை செய்யும் ஒரு வியாபாரியின் கடைக்குள் வெள்ளம் புகுந்தது என்றும், அதை தடுக்க ஏன் ஒரு கடவுளும் வரவில்லை? அப்படியென்றால் அவை வெறும் கல்லா?  என்பது போன்ற கேள்விகளை சுல்கிப்ளி கேட்பது போலவும் காட்சிகள் உள்ளன.

சுல்கிப்ளி நோர்டின் ஒரு முன்னாள் பிகேஆர் கட்சி உறுப்பினர் என்பதுடன் கடந்த 2008 பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சி சார்பாக கூலிம்-பண்டார் பாரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் தற்போது இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ள சுல்கிப்ளியின் விமர்சனத்தால் மலேசியா முழுதும் உள்ள இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கெடா இந்து அமைப்புகள் மறியல்

சுல்கிப்ளி நோர்டினுக்கு எதிராக கூலிமைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஒன்றுகூடி, கடுமையான எச்சரிக்கை விடுத்ததுடன், அவரின் உருவப்படத்தை செருப்பால் அடித்து முகத்தில் காரி உமிழ்ந்தனர். அதன் பின் அவர்கள் கூலிம் மாவட்ட காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

இனியும் இதுபோன்ற ஈனத்தனமான பேச்சுக்களை  இந்த நாட்டில் யாரும் பேசக்கூடாது என்றும், இந்தியர்களை மட்டுமல்லாமல் மற்ற மதத்தினரையும் அவமதிப்பவர்களுக்கு அரசாங்கம் அதர்கேற்ப தண்டனைகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

மேலும் சுல்கிப்ளிக்கு கொடுக்கும் தண்டனை, மலேசியாவில் இன, மதங்களை அவமதிப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று கெடா இந்து அமைப்புகள் கேட்டுக் கொண்டனர்.

மலேசிய இந்தியர் நீதிக்கட்சி

மலேசிய நாட்டில் வாழும் இந்திய இனம், இஸ்லாம் சமயத்தை ஒருபோதும்  இழிவுபடுத்தியதில்லை என்றும், மற்ற மதங்களை மதிக்கின்ற பண்பும், பகுத்தறிவும் இந்தியர்களின் குறிப்பாக இந்து சமயத்தைச் சார்ந்தவர்களின் பிறவிக் குணமாகவே இருந்து வருகிறது  என்றும் இந்தியர் நீதிக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ கிருஷ்ணா தெரிவித்தார்.

மேலும், மலேசிய தேசிய இனவாத கொள்கையில் மாபெரும் கலங்கத்தை சுல்கிப்ளி ஏற்படுத்திருக்கும் செயலானது மன்னிக்க முடியாது என்றும்   கிருஷ்ணா தெரிவித்தார்.

தைப்பிங் ம.இ.கா. இளைஞர் பிரிவு

தைப்பிங் தொகுதி காங்கிரஸ் இளைஞர் பிரிவு தலைவரும் மாநில ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவருமான எம்.வீரன், சுல்கிப்ளி ஆற்றிய உரையை இணையத்தளத்தில் வெளியானதைக் கண்டு மன வேதனை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

“இந்து மதத்தை இழிவுப்படுத்திப் பேசி அரசியல் பிரமுகர்கள் சிலர் நாட்டில் இன ஒற்றுமையை சீர்குலைத்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று நேற்று செய்தியாளர்களிடம் எம்.வீரன் இவ்வாறு கூறினார்.

அவருக்கு எதிராக உள்துறை அமைச்சு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதே சமயத்தில் இந்த நாட்டில் உள்ள இந்து மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அரசு சார்பற்ற இந்திய இயக்கங்கள்

மேலும், சுல்கிப்ளி மீது உள்துறை அமைச்சும், போலிஸ் படையும் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூறி  அரசு சார்பற்ற இந்திய இயக்கங்கள் அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஈடுப்பட்டனர்.

நேற்று தலைநகர் பிரிக்பீல்ட்ஸில் உள்ள நீர் வீழ்ச்சி குளத்தின் அருகே ஒன்று திரண்ட அவர்கள், சுல்கிப்ளிக்கு எதிராக தங்களின் அதிருப்தியை  வெளிப்படுத்தியதோடு அவர் மீது கடுமையான தண்டனை எடுக்கபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

சமய சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பகையுணர்வையும்,வெறுப்பையும் தூண்டும் வகையில் பேசிய அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றவியல் சட்டவிதியான செக்‌ஷன் 298 (பி)யின் கீழ் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் நாடு தழுவிய நிலையில் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று மலேசிய இந்தியர் முன்னேற்ற மன்றத்தின் பொதுச்செயலாளர் எஸ். பாரதிதாசன் எச்சரித்தார்.

இந்நாட்டில் இந்துக்களையும் இந்தியர்களையும் புண்படுத்தும் செயல் தொடர்ந்து கொண்டே வருவதாக  தமிழர் பணிப்படையின் துணைச்செயலாளர் கண்ணன் இந்நிகழ்வில் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் ஒரே மலேசியா கொள்கை உண்மையென்றால், சுல்கிப்ளியின் மீது உடனடி நடடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம், தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் இந்திய தலைவர்கள் நாளிதழ் வாயிலாக அறிக்கைகளை விடாமல் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக போராட்டத்தில் இறங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்வாறாக, அரசு சார்பற்ற இந்திய இயக்கங்களிருந்து பலர் சுல்கிப்ளிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கண்டனப் பேரணியில் தமிழர் பணிப்படை, மீப்பாஸ், வர்கா அமான் உள்ளிட்ட இயக்கங்களிருந்து நாற்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.