Home இந்தியா சோனியா காந்திக்கு ஸ்டாலின் நேரில் பிறந்த நாள் வாழ்த்து

சோனியா காந்திக்கு ஸ்டாலின் நேரில் பிறந்த நாள் வாழ்த்து

888
0
SHARE
Ad
(இடமிருந்து:) டி.ஆர்.பாலு, ஸ்டாலின், சோனியா காந்தி, கனிமொழி…

புதுடில்லி – நாளை திங்கட்கிழமை புதுடில்லியில் ஆளும் பாஜக அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு நடத்தவிருக்கும் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஞாயிற்றுக்கிழமை தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்துத் தனது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“தலைவர் கலைஞர் அவர்களின் மீது மாறாத பற்றும் பாசமும் கொண்ட அவர், மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைந்தவுடன் தலைவர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று, தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கிடும் வண்ணம், செந்தமிழ் மொழியைச் செம்மொழியே எனப் பிரகடனப்படுத்துவதற்கு மிகவலிமையான அடித்தளம் அமைத்தவர். மதச்சார்பின்மைக் கொள்கையில் உறுதியான நம்பிக்கைக் கொண்ட அவர், நாட்டின் பொதுநலன் கருதியும், அனைவருடைய பொதுவான நோக்கங்களுக்கு வடிவமைப்பு கொடுத்திடும் வகையிலும், அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பிற்குத் தூண்டுகோலாகவும் உற்ற பெருந்துணையாகவும் இருந்து வருகிறார்” என ஸ்டாலின் தனது பிறந்த நாள் செய்தியில் சோனியா காந்திக்கு புகழாரம் சூட்டினார்.

“பிளவுபடுத்தும் பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் கனிவும், துணிவும், தெளிவும் மிக்க செயல்பாடுகளும் கொண்ட அன்னை சோனியா அவர்கள், நலமோடும் மகிழ்வோடும் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து, இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உகந்த வழிகாட்டிட வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன்” என்றும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியையும் ஸ்டாலின் சந்தித்தார்.

இந்த சந்திப்புகளின் மூலம் திமுக-காங்கிரஸ் இடையிலான கூட்டணி அமையவிருப்பது மேலும் உறுதியாகியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.