வாஷிங்டன் – சவுதி அரேபிய பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் சவுதி இளவரசர் முகமட் பின் சல்மான் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நிலவி வரும் வேளையில் தற்போது மேலும் ஒரு புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கஷோகியின் படுகொலையைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகனும், அவரது முக்கிய ஆலோசகருமான ஜேரட் குஷ்னர் தனிப்பட்ட முறையில் சவுதி இளவரசர் முகமட் சல்மானுடன் பேச்சு வார்த்தை நடத்தி சில ஆலோசனைகள் வழங்கினார் என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு.
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது.
கஷோகியின் கொலையைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அதனைச் சமாளிப்பது எப்படி என்ற ஆலோசனையை குஷ்னர் வழங்கினார் என சவுதி வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்தப் பத்திரிக்கை கூறுகிறது.
இந்தப் புதியத் தகவலைத் தொடர்ந்து டிரம்புக்கு புதிய நெருக்குதல்கள் அமெரிக்காவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.