குவாங்சோ (சீனா) : குவாங்சோ நகரில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி தொடங்கிய வோல்ட் டுவர் பைனல்ஸ் (World Tour Finals) பூப்பந்து தொடரில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்றார்.
பூப்பந்து தரவரிசையில் முதல் எட்டு இடங்களுக்குள் உள்ள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட இவ்விளையாட்டில் , பி.வி.சிந்து ஜப்பானின் நொசோமி ஒகுஹாராவை 21-19, 21-17 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார்.
“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த ஆண்டின் முதல் வெற்றி என்பதால், வார்த்தைகளால் இந்த வெற்றியைச் சொல்ல இயலவில்லை”, என்றார் சிந்து.
“இவ்வாண்டிற்கான சிறந்த ஓர் ஆட்டமாக இதனை நான் கருதுகிறேன்.மேலும், இந்த வெற்றியானது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக திகழும்”, என்று போட்டி முடிவுற்றதும் சிந்து தெரிவித்தார்.
தமக்கு ஆதரவாக இருந்த அனைத்துத் தரப்பினருக்கும் தமது நன்றியை சிந்து பகிர்ந்து கொண்டார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு, இரண்டு உலக சாம்பியன்ஷிப், மற்றும் உலக பூப்பந்து கூட்டமைப்பின் சூப்பர் சீரிஸ் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை சிந்து வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை வென்ற தங்கப் பதக்கம் அவருக்கும் , இந்திய நாட்டிற்கும் பெருமையை ஈட்டித் தந்துள்ளது.