Home நாடு “இந்த இளைஞனின் வாயை மூட முடியாது” – இராமசாமிக்கு எதிராக சைட் சாதிக் கருத்து

“இந்த இளைஞனின் வாயை மூட முடியாது” – இராமசாமிக்கு எதிராக சைட் சாதிக் கருத்து

1520
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்த பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதியின் தலைவரும்  இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சருமான சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மானின் நடவடிக்கைக் குறித்து பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி கண்டித்திருந்தார்.

ஒரு சக அமைச்சருக்கு எதிராக இன்னொரு அமைச்சர் பதவி விலகச் சொல்லி மனு கொடுப்பது முறையற்றது எனக் கூறியிருந்த இராமசாமி, தேசிய ஒற்றுமை குறித்த கேள்விகள் பிரதமரை நோக்கிக் கேட்கப் பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

பெர்சாத்து கட்சியின் தலைவர் துன் மகாதீர் எடுத்த முடிவுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் சைட் சாதிக் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இராமசாமி வலியுறுத்தியிருந்தார்.

#TamilSchoolmychoice

இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் தனது முகநூல் பக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பதிவிட்டிருந்த சைட் சாதிக் “பாதுகாப்பான அரசியல் விளையாடவோ, எல்லோருக்கும் ஆமாம் சொல்லவோ நான் அரசியலில் நுழையவில்லை.பொதுமக்களின் குரல்கள் கேட்கும்போது எனது காதுகளைப் பொத்திக் கொள்ளவோ, அமைதியாக இருக்கவோ நான் அரசியலில் நுழையவில்லை” எனக் கூறியிருக்கிறார்.

“நான் செய்தது தவறென்றால் அதற்கான நடவடிக்கையை எதிர்நோக்கத் தயாராக இருக்கின்றேன். ஆனால் என் மனதுக்கு சரியெனப் பட்டதைப் பேசியதற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்றும் சைட் சாதிக் தெரிவித்திருக்கிறார்.

என்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லும் இராமசாமி, வேதமூர்த்தி விலக வேண்டும் என்ற கருத்தைக் கூறியிருக்கும் மற்றொரு பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் அபிப் பஹார்டின்,  பார்ட்டி அமானா நெகாராவின் இளைஞர் பகுதியினர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்றும் சைட் சாதிக் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

இராமசாமி சார்ந்திருக்கும் ஜசெக கட்சியின் இளைஞர் பகுதியும் ஒருமுறை கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்ததையும் இராமசாமிக்கு சைட் சாதிக் நினைவூட்டினார்.

“எனது கருத்துகள் இனவாதக் கருத்துகள் அல்ல. நாம் மாற்றுக் கருத்துக் கூறுவதற்கும், ஒருவருக்கொருவர் முரண்படுவதற்கும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். மக்களின் சுதந்திரமான கருத்துகளை வெளியே வராமல் நசுக்கி விடக் கூடாது. இளைஞர் பகுதியில் இருக்கும் எனது நண்பர்கள் தெரிவித்த கருத்துகளை அடக்கி விடக் கூடாது, அவர்களும் சுதந்திரமாக அவற்றைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் வழிவிட்டேன். எனவே, இந்த இளைஞனின் வாயை மூட நினைக்க வேண்டாம்” எனவும் சைட் சாதிக் கூறியிருக்கிறார்.