Home நாடு “புதிய மலேசியா : முடிவின் தொடக்கம்” – மலேசியர்கள் ஏமாற்றம்

“புதிய மலேசியா : முடிவின் தொடக்கம்” – மலேசியர்கள் ஏமாற்றம்

1304
0
SHARE
Ad

கோலாலம்பூர்: “பிரதமர் துன் மகாதீரின் ஊடக ஆலோசகர் டத்தோ காடிர் ஜாசின்மீது மலேசியர்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். பிரதமரின் ஆலோசகராக இருக்கும் ஒருவர் எப்படி தவறான ஆலோசனையை வழங்க முடியும் என்றும் இது என்ன புது மலேசியாவின் முடிவின் தொடக்கமா என்றும் கேட்டு நாடு முழுவதிலும் இருந்து வரும் கேள்விகளையும், அழைப்புகளையும் ஹிண்ட்ராப் இயக்கத்தால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று ஹிண்ட்ராப் சட்ட ஆலோசகர் கார்த்திக் ஷான்  தெரிவித்துள்ளார்.

பழுத்த அனுபவமிக்க ஊடகவியலாளரான காடிர் ஜாசின், ஒருமைப்பாட்டு உணர்வுதான் ஒரு பத்திரிகையாளருக்கான நம்பகத்தன்மையின் அடித்தளம் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

“அமைச்சர் பொன்.வேதமூர்த்தி காரண காரியம் அறியாத பிரிவினைக் குணம் கொண்டவர்” என்று ஜாசின் குறிப்பிடுவதன் மூலம், அவர் இன-சமய உணர்ச்சியின் அடிப்படையில் பொய்யான தகவலை பரப்பி தவறாக வழிகாட்டும் கும்பல்களுக்கு ஆதரவளிக்கிறார் என்பது புலனாகிறது. ஒருவரின் நம்பகத்தன்மை குறித்து சரியாக அறிந்து கொள்வதும் அதை கவனமாக வெளிப்படுத்துவதும்தான் ஓர் ஊடகவியலாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்பாகும். இப்படிப்பட்ட நிலையில், இன அடிப்படையையும் மத வாதத்தையும் உள்ளீடாகக் கொண்டு செயல்படும் கும்பல்கள், ஓர் அமைச்சர் தானாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு ஓர் ஊடகவியலாளர் துணை போவது எந்த வகையில் நியாயமாகும்?” என்றும் கார்த்திக் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

“இப்படிப்பட்ட கும்பல்களுக்கு செவிசாய்த்து, அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று மேம்போக்காகக் கேட்பது உண்மையை மறைப்பதற்கு சமமாகும்; ஊடகவியல் தன்மைக்கும் இழுக்காகும். இன-சமய ரீதியாக செயல்படும் அடிப்படைவாதிகளின் போக்கு குறித்து மலேசிய மக்கள் எச்சரிக்கையுடன் சிந்திக்கும் வேளையில், ஓர் ஊடக ஆலோசகர் சம்பந்தப்பட்ட கும்பலுடன் சேர்ந்து கொள்வது அத்தனைப் பொருத்தமாக இல்லை; பிரதமரின் ஊடக ஆலோசகராக இருக்கும் ஒருவர், தனிப்பட்ட முறையில் இப்படி செயல்பட்டாலும்கூட, இது, மலேசிய அரசியல் வானில் தோன்றியுள்ள புது மலேசியாவிற்கான முடிவு ஆரம்பமாகி விட்டதோ என்று பொதுமக்கள் மத்தியில் எண்ண அலைகளைத் தோற்றுவித்துள்ளது” என்றும் கார்த்திக் ஷான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“புதிய மலேசியாவின் ஓர் அங்கமாகவும் ஏனைய அமைச்சர்களுடன் இணைந்தும் செயல்படும் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்று இன-மத அடிப்படைவாதிகள் வலியுறுத்துவது புதிய மலேசியா மறைவதற்கான தொடக்கமாக பொதுமக்களால் பார்க்கப்படுகிறது. புதிய ஆட்சியில் பொன்.வேதமூர்த்தி தலைமையில் இந்திய சமுதாயத்தினர் மிகப் பெரிய நம்பிக்கையுடன் புதிய காற்றை சுவாசித்து வருகின்றனர். இந்த நல்ல சுழலில், அமைச்சரை பதவி நீக்க முயற்சிப்பது, பிரதமர் துன் மகாதீர் தலைமையில் இந்திய சமுதாயம் கொண்டுள்ள புது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் சிதைந்துபோகும்” என்றும் ஹிண்ட்ராப் சட்ட ஆலோசகர் கார்த்திக் ஷான் தன்னுடைய அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.