Home நாடு புகைபிடிக்கக் கூடாது என அறிவுறுத்திய பணியாளருக்கு அறை!

புகைபிடிக்கக் கூடாது என அறிவுறுத்திய பணியாளருக்கு அறை!

774
0
SHARE
Ad

ஷா அலாம்: இங்குள்ள செக்‌ஷன் 25-ல் அமைந்திருக்கும் உணவகம் ஒன்றில், உணவகத்தில் புகைபிடிக்கக்கூடாது என கடையின் ஊழியர் ஒருவர் சொன்னதற்கு சம்பந்தப்பட்ட நபர் அவரைக் கன்னத்தில் அறைந்தார். 

ஷா ஆலம் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி பஹாருடின் மாட் தாய்ப் கூறுகையில், இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை மதியம் 12:30 மணி அளவில் நடந்ததாகவும், இந்திய நாட்டினைச் சேர்ந்த அந்த ஊழியருக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை எனவும் கூறினார்.

#TamilSchoolmychoice

உணவக உரிமையாளர் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். சம்பவத்தின் போது, 30 வயது நிரம்பிய மூன்று உள்நாட்டு ஆடவர்கள், அவரது உணவகத்தில் புகைபிடித்துக் கொண்டிருந்ததாகவும், அதனைத் தடுக்கக் சென்ற தம் ஊழியரை அம்மூவரில் ஒருவன் அறைந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் அவர்கள் பணத்தைச் செலுத்தி விட்டு, உணவகத்தை விட்டு வெளியேறினர் என்றும் பஹாருடின் கூறினார்.

குற்றவியல் வழக்கு 323 பிரிவின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படும் எனவும், சம்பந்தப்பட்ட நபர் தாமாக முன் வந்து காவல் நிலையத்தில் வாக்குமூலம் தரும்படியும் பஹாருடின் அறிவுறுத்தினார்.

இதற்கிடையே, கடந்த அக்டோபர் மாதத்தில்புகைபிடித்தல் எல்லா உணவகங்களிலும் அனுமதிக்கப்படமாட்டாது என்று சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. அவ்வாறு, தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகைப் பிடிப்பவர்களுக்கு 10,000 ரிங்கிட் வரையிலும் அபராதமும், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும்  விதிக்கப்படும் எனவும் அது கூறி இருந்தது.

கடை உரிமையாளர்கள் பொதுமக்களை தங்களின் உணவகங்களில் புகைப் பிடிக்க அனுமதித்தால் அவர்களுக்கு 2,500 ரிங்கிட் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.