பெக்கான் – பகாங் மாநிலத்தின் ஆறாவது புதிய சுல்தானாக தெங்கு அப்துல்லா இன்று பதவியேற்கின்ற காரணத்தால், ‘ஜனவரி 15’ பகாங் மாநில வரலாற்றில் மறக்க முடியாத, என்றுமே பதிந்திருக்கும் நாளாகத் திகழும்.
பகாங் மாநிலத்தின் அரச நகரான பெக்கானில் உள்ள சுல்தான் அபு பாக்கார் அரண்மனையில் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமட் ஷாவாக இன்று பதவியேற்கும் தெங்கு அப்துல்லாவுக்கு வயது 59.
கடந்த 1959-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி பிறந்த தெங்கு அப்துல்லாவின் முடிசூட்டு விழாவில் அரச குடும்பத்தினர், மாநில அரசாங்கத் தலைவர்கள், சமூக, மற்றும் கிராமத் தலைவர்கள் என சுமார் 1600 பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 11.00 மணியளவில் சுல்தானின் பதவியேற்பு சடங்குகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெங்கு அப்துல்லா சுல்தான் அகமட் ஷாவின் நான்காவது பிள்ளையும் மகன்களில் மூத்தவருமாவார். கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 11-ஆம் தேதி கூடிய மாநில அரச மன்றம் தெங்கு அப்துல்லாவை அடுத்த சுல்தானாக நியமித்தது. நோய்வாய்ப்பட்டு, தனது ஆட்சியாளர் பணிகளைத் தொடர முடியாமல் இருக்கும் 88 வயதான அவரது தந்தையும் பகாங் மாநிலத்தின் 5-வது சுல்தானுமாகிய அகமட் ஷாவுக்குப் பதிலாக தெங்கு அப்துல்லா, ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் சுல்தானாக நியமிக்கப்பட்டார்.
சுல்தான் அகமட் ஷா 7-வது மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தெங்கு அப்துல்லா முதன் முறையாக பகாங் மாநிலத்தின் இளவரசராக (ரீஜண்ட்) 28 ஏப்ரல் 1979-ஆம் நாள் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டார்.
மாமன்னராகப் பணிகளை முடித்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சுல்தான் அகமட் ஷா மாநிலத்திற்குத் திரும்பியதும், மீண்டும் சுல்தானாகத் தனது பதவிகளைத் தொடர்ந்தார். 2016-ஆம் ஆண்டில் சுல்தான் அகமட் ஷா உடல்நலம் குன்றியபோது, தெங்கு அப்துல்லா மீண்டும் 28 டிசம்பர் 2016-இல் இளவரசராக நியமனம் பெற்றார்.
சுல்தான் அப்துல்லா துணைவியார் தெங்கு புவான் பகாங் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா ஆவார். அவர்களுக்கிடையிலான திருமணம் 6 மார் 1986-ஆம் நாள் நடைபெற்றது. அவர்களுக்கு 4 மகன்களும், 5 மகள்களும் இருக்கின்றனர்.