குவாந்தான் – அரசராவதற்கு அம்சம் வேண்டும் என்பார்கள். அது மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது பகாங் மாநில இளவரசரான தெங்கு அப்துல்லாவுக்கு (படம்)!
1957-ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்ற போது அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் ஒரு புதிய அரசியல் அமைப்பை மலேசியாவில் உருவாக்கினார்.
அதன்படி நாட்டின் சுல்தான் என அழைக்கப்பட்ட மாநில மலாய் ஆட்சியாளர்களையும், ஜனநாயக முறைப்படியிலான அரசாங்கத்தையும் இணைத்து உலகத்தில் எங்குமே இல்லாத புதுமையான நடைமுறை ஒன்று மலேசியாவில் பின்பற்றப்பட்டது. அனைவரின் ஒத்துழைப்பாலும், புரிந்துணர்வாலும் இன்று வரை அந்த அரசியல் அமைப்பு நடைமுறை வெற்றிகரமாக இயங்கி வருகிறது என்பது மலேசியாவுக்கும், அதன் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.
நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் முதலாவது மாமன்னராக சுதந்திரத்திற்குப் பின்னர் பதவியேற்க, அதனைத் தொடர்ந்து வரிசையாக அடுத்தடுத்து ஒவ்வொரு சுல்தானும் ஐந்து ஆண்டுகளுக்குப் பதவி வகித்தனர். ஒரு சிலர் பதவிக் காலத்தில் மரணமடைந்த காரணத்தால் மட்டுமே 5 ஆண்டுகளுக்கும் குறைவாகப் பதவி வகித்தனர்.
சுழற்சி முறையிலான அந்த வரிசையில் அனைத்து மாநில சுல்தான்களும் ஒரு முறை பதவி வகித்து விட்டனர். ஒரே சுல்தான் இருமுறை மாமன்னராக பதவி வகித்த பெருமை – அதிலும் இரண்டு தவணைகளிலும் முழுமையான 5 ஆண்டுகளை நிறைவு செய்த சாதனை கெடா சுல்தானுக்கு மட்டுமே கிட்டியது.
அந்த வரிசையில் ஏழாவது மாமன்னராகப் பதவி வகித்தார் பகாங் மாநிலத்தின் தற்போதைய ஆட்சியாளரான சுல்தான் அகமட் ஷா. தற்போது 5 ஆண்டுகளை நிறைவு செய்வதற்கு முன்பே வரலாற்றில் முதன் முறையாக தனது மாமன்னர் பதவியை கிளந்தானின் ஆட்சியாளர் சுல்தான் முகமட் துறந்துவிட, சுழற்சி முறையில் அடுத்த வாய்ப்பு மீண்டும் பகாங் சுல்தான் அகமட் ஷாவுக்கே வழங்கப்படும்.
ஆனால், 88 வயதான அவர் உடல் நலம் குன்றி இருப்பதால் – அதனால் அவரால் மாமன்னருக்கான பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதால் – அவரது மகனான தெங்கு அப்துல்லாவுக்கு மாமன்னராகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில், இன்று பகாங் மாநில அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அதன்வழி, தெங்கு அப்துல்லா 6-வது பகாங் மாநில சுல்தானாக முடிசூட்டப்பட, மாநில அரச மன்றம் முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி 15-ஆம் தேதி தெங்கு அப்துல்லா பகாங் மாநில சுல்தானாக அரியணையில் அமர்வார்.
அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி 24-ஆம் தேதி மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் கூடி புதிய மாமன்னரைத் தேர்ந்தெடுக்கும்.
அடுத்த மாமன்னராகும் முதல் வாய்ப்பு பகாங் மாநில ஆட்சியாளருக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜனவரி 15-ஆம் தேதியே சுல்தானாக பதவியேற்கவிருக்கும் தெங்கு அப்துல்லாவுக்கு அடுத்த மாமன்னராகும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தான் அரசராவதற்கும் ஓர் அம்சம் வேண்டும் என்கிறார்களோ?