புது டெல்லி: இந்திய நாட்டைச் சேர்ந்த ‘பீரீயட்: தி என்ட் ஆப் சென்டென்ஸ்’ (Period: The End of Sentence ) ஆவணப்படம் 2019-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுப் போட்டிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முறை பரிந்துரைக்கப்பட்ட ஒரே ஒரு இந்தியத் திரைப்படமாக இப்படம் அமைகிறது. இந்திய-ஈரானிய திரைப்பட இயக்குநர் ராய்கா ஜேடாப்ச்சி இப்படத்தினை இயக்கியுள்ளார்.
மாதவிடாய் பற்றிய கருத்தினை மையமாகக் கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாதவிடாய் குறித்து இந்தியப் பெண்களிடையே நிலவும் தவறுதலான கருத்துகளையும், புரிதல்களையும் சித்தரிக்கும் வண்ணமாகப் படம் நகர்த்தப்பட்டிருக்கிறது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் அணையாடைகளை (நேப்கின்களை) குறைந்த விலைகளை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுப்பிடித்து, அக்காலக்கட்டத்தில் ஏழை எளிய பெண்களுக்கு சுகாதாரமான முறையில் இருப்பதற்கு பெருமளவில் உதவி புரிந்தவர். இவரது இந்த முயற்சியைக் கருப்பொருளாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதே கதைக்கருவை வைத்து, அக்ஷாய் குமார் நடிப்பில் பேட்மேன் எனும் இந்திப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 91-வது ஆஸ்கார் விருது விழா வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.