சென்னை: நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழகத்திற்கு வருகைத் தந்திருந்த, இந்தியப் பிரதமர் மோடிக்கு பலத்த எதிர்ப்பு நேரடியாகவும், சமூக ஊடகங்களிலும் நிலவி வந்தது. அவரின் தமிழக வருகை பாஜக தொண்டர்கள் மற்றும் அக்கட்சி நிருவாகிகளுக்கு உற்சாகத்தை அளித்த அதே அளவில், அவருக்கு எதிரான விமர்சனங்களும் எழுந்தன.
சமூக உடகங்களில், #GoBackModi என்கிற ஹேஷ்டேக் பரவலாகப் பகிரப்பட்டு, முதல் பத்து இடங்களில் இடம்பெற்றது. மோடியின் தமிழக வருகையை எதிர்த்து, இந்த ஹேஷ்டேக் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரலவாகப் பகிரப்பட்டது.
விவசாயிகள் மற்றும் நீட் பிரச்சனைகள், என பல்வேறு சமூகப் பிரச்சனைகளில் தமிழகத்தை கண்டுக்கொள்ளாத மத்திய அரசாங்கத்தை எதிர்த்து, கடந்தக் காலங்களில், இவ்வாறான எதிர்ப்பலைகள் எழுந்த வண்ணமாகவே உள்ளன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களைக்கூட பிரதமர் மோடி வந்து சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதுரையில் அமைய இருக்கும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வந்த நரேந்திர மோடிக்கு, தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.