Home நாடு டிஎச்ஆர் ராகா உதயா சர்ச்சை – “எங்களின் நடவடிக்கை தொடரும்” தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் அறிவிப்பு

டிஎச்ஆர் ராகா உதயா சர்ச்சை – “எங்களின் நடவடிக்கை தொடரும்” தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் அறிவிப்பு

1443
0
SHARE
Ad

கோலாலம்பூர் – டிஎச்ஆர் வானொலியின் அறிவிப்பாளர் உதயா, வானொலி நேயர் ஒருவருடன் நடத்திய உரையாடல் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை முதல் சமூக ஊடகங்களில், அதிக அளவில் பகிரப்பட்டு சர்ச்சையாகியிருக்கும் நிலையில், தனது கருத்துகளுக்கு உதயா மன்னிப்பு தெரிவித்திருந்தாலும் தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும் என மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னர் தெரிவித்தார்.

உதயா மன்னிப்பு கோரியிருந்தாலும், டிஎச்ஆர் ராகா நிறுவனத்தின் சார்பில் அதன் மூத்த அதிகாரிகள் தங்களிடம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்திருந்தாலும், உதயா தெரிவித்திருக்கும் மன்னிப்பு எங்களுக்குத் திருப்திகரமாக இல்லை என செல்லியல் தொடர்பு கொண்டபோது முத்தமிழ் மன்னன் தெரிவித்தார்.

எனவே, எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறினார்.

சங்கத்தின் துணைச் செயலாளர் சூர்யகுமார் அதிருப்தி

#TamilSchoolmychoice

இதற்கிடையில் மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் துணைச் செயலாளர் சூர்யகுமார் பதிவிட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள செய்தியில் உதயா, தமிழ்ப் பத்திரிகையாளர் அலுவலகத்திற்கு வந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டாலும், அவர் தனது செயலை நியாயப்படுத்தியே பேசுகிறார் என்று கூறியிருக்கிறார்.

அவர் தனது தவறை உணர்ந்து பேசியதாக அறிகுறிகள் தென்படவில்லை என்று கூறியிருக்கும் சூர்யகுமார் ஒப்புக்காகவே பொது மன்னிப்பு கோரியிருக்கிறார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

உரையாடலில் பேசப்பட்டது என்ன?

உதயாவுக்கும், வானொலி நேயர் ஒருவருக்கும் இடையில் நடைபெற்றதாகக் கூறப்படும் அந்த உரையாடலில், வானொலி நேயர் ஒருவர், பெயர் குறிப்பிடாமல், தமிழ்ப் பத்திரிக்கைகளைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கிறார். தமிழ்ப் பத்திரிக்கைகள் பெரிதாக இருக்கின்றன, அவற்றைக் கீழே விரித்துப் படுக்கத்தான் லாயக்கு, சோறு மடிக்கத்தான் லாயக்கு, தமிழ்ப் பத்திரிகைகள் தேவையற்ற குப்பைச் செய்திகளை வெளியிடுகின்றன, அவற்றை இழுத்து மூட வேண்டும் என்றெல்லாம் அந்த வானொலி நேயர் பேசிக் கொண்டே செல்ல, அதற்கேற்ப உதயாவும், அந்நபருக்கு ஒத்து ஊதுவது போலவும், ஒப்புக் கொள்வது போலவும் பேசுகிறார்.

சமூக செய்திகளை தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிடுவதில்லை, மாறாக டத்தோஸ்ரீ, டான்ஸ்ரீ என பெரிய மனிதர்களின் நிகழ்ச்சிகளை மட்டுமே வெளியிடுகின்றன என்றும் அந்த வானொலி நேயர் அந்த உரையாடலில் சாடியிருக்கிறார். ஆனால் இதையெல்லாம் தவிர்க்க முயற்சி செய்யாமல், அந்த நேயர் கூறும் கருத்துகளுக்கு மறுப்பு சொல்லாமல், மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டே உதயா அவரை மேலும் உற்சாகப்படுத்துகிறார்.

இதுபோன்ற உரையாடலை டிஎச்ஆர் வானொலி ஒலிபரப்பியதா – அல்லது வானொலியில் இடம் பெறாத உரையாடல் இது என்றால் அதனை ஒலிப்பதிவு செய்தது யார், வெளியிட்டது யார் என்பது போன்ற கேள்விகளும் இயல்பாகவே எழுகின்றன.

தமிழ் மொழி வானொலி ஒன்று இவ்வாறு செய்திருப்பது – தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதுவும் அதே தமிழ் மொழியைப் பயன்படுத்தி வணிக ரீதியாக செயல்படும் தனியார் வானொலியும், அதன் தமிழ் அறிவிப்பாளரும் இத்தகைய கருத்துகளை வெளியிடுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

அந்த உரையாடல் டிஎச்ஆர் வானொலியில் ஒலிபரப்பப்பட்டதா என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை எனினும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.