Home நாடு அமைச்சர் இயோ பீ யின்னுக்கு திருமணமா?

அமைச்சர் இயோ பீ யின்னுக்கு திருமணமா?

1173
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – மலேசியாவில் அமைச்சர் ஒருவருக்கு திருமணம் நடைபெறுவது என்பது மிக அபூர்வமாகவே நடைபெறும் ஒரு சம்பவமாகும். காரணம், அமைச்சர்களாக நியமனம் பெறுபவர்கள் பெரும்பாலும் 40 வயதைக் கடந்தவர்களாகவே இருப்பர்.

ஆனால், 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பதவியேற்ற அமைச்சரவையில் சில அமைச்சர்கள் திருமணம் ஆகாதவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

அதில் ஒருவர் இயோ பீ யின்! ஆற்றல், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் மற்றும் பருவமாற்றத்திற்கான அமைச்சரான இவர் இளமையானவர் என்பதோடு, இன்னும் திருமணம் ஆகாதவர்.

#TamilSchoolmychoice

இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக், திருமணம் ஆகாத மற்றொரு அமைச்சராவார்.

இயோ பீ யின்னின் திருமணம் எதிர்வரும் மார்ச் 29-ஆம் தேதி நடைபெறும் எனவும் அவரைக் கரம் பிடிக்கப் போகிறவர் ஐஓஐ புரொபர்ட்டிஸ் குரூப் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லீ இயோவ் செங் என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நாடு முழுமையிலும் பல தோட்டங்களையும், சொத்துகளையும் கொண்டிருக்கும் ஐஓஐ நிறுவனம், (IOI Properties Group Bhd) பூச்சோங் வட்டாரத்தில் மிகப் பெரிய வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்ட நிறுவனமாகும்.

ஆனால் அமைச்சர் இயோ இதனை இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. 36 வயதான இயோ கரம் பிடிக்கும் 40 வயதான லீ, நாட்டிலுள்ள பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான டான்ஸ்ரீ லீ ஷின் செங்கின் மகனாவார்.

ஏற்கனவே சமூக ஊடகங்களில் இயோ பீ யின் தனது காதலருடன் இணைந்திருக்கும் படங்கள் பகிரப்பட்டிருக்கின்றன.