கியூபா: நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கு கியூபா மீது விண்கல் ஒன்று வெடித்து விழுந்ததாக சின்ஜுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அந்த வெடிப்பின் காரணமாக, சுற்றுலாப் பகுதியான விஞ்ஞாலெஸில் (Vinales) உள்ள வீடுகள் மற்றும் இதரப் பகுதிகளில் அக்கல் சிதறிக் கிடந்ததாக கூறப்பட்டது.
இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என கியூபா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கியூபாவின் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் வல்லுநர்கள், இச்சம்பவம் குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் அப்பகுதி வாழ் மக்கள், விண்கல்லின் சிறு துண்டுகளின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில், சில கைப்பேசி அளவில் உள்ளன. இந்த சம்பவத்தின் போது, அசாதாரண உரத்த சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
கியூபாவின் கடற்கரையிலிருந்து 140 கிமீ தொலைவில் உள்ள கீ வெஸ்ட், புளோரிடாவை, விண்கல் ஒன்று கடந்து சென்றதாக அமெரிக்க தேசிய வானிலை மையம் பின்னர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது.