கோலாலம்பூர்: பிலிப்பைன்ஸ்சில், மலேசியா நாட்டுக் கொடியை பொதுமக்கள் சிலர் கொளுத்தும் சம்பவம் குறித்து பிலிப்பைன்ஸ் அரசு விசாரித்து வருவதாக பிலிப்பைன்ஸ் நாட்டு தூதரகம் , அறிக்கை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தது.
இந்த சம்பவத்தை பிலிப்பைன்ஸ் அரசு ஏற்றுக் கொள்ளாது எனவும், இந்த காணொளியில் வரும் நபர்கள், மலேசியர்களின் உணர்வை இழிவுபடுத்தியதற்காகவும் பிலிப்பைன்ஸ் அரசு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டிருந்தது. இந்த செய்கையினால் மலேசியாவிற்கும் பிலிப்பைன்ஸ்சிற்கும் இடையிலான உறவு எவ்விதத்திலும் பாதிக்காது என அது நம்பிக்கைத் தெரிவித்தது.
கடந்த காலங்களில் பல சர்ச்சைக்குரிய விசயங்களைச் செய்ததாகக் கூறப்படும் குறிப்பிட்ட அந்த குழு, ஒரு தனிப்பட்ட அமைப்பாக இருந்து இக்காரியத்தை செய்துள்ளது எனவும், அவர்களின் அத்தகைய செய்கையானது ஒட்டு மொத்த பிலிப்பைன்ஸ் அரசின் நிலைப்பாட்டை பிரதிநிதிக்கவில்லை எனவும் அது குறிப்பிட்டது.
இதற்கிடையே, எல்லி பாமாதோங் என்பவரின் ஆதரவாளர்கள் சிலர் ஜனவரி 19 மற்றும் 21-இல் மலேசியக் கொடியைக் கொளுத்தும் காணொளியை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.