கோலாலம்பூர்: எதிர்க்கட்சிகளின் இளைஞர் பகுதியினர் முதல் முறையாக சந்திப்புக் கூட்டம் ஒன்றினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பாடு செய்திருந்தனர். அச்சந்திப்பில் அம்னோ, பாஸ், இக்காதான் மற்றும் பெர்ஜாசா கட்சிகளின் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் மூலமாக தாங்கள் சிறப்புக் குழு ஒன்றினை அமைத்து, மதம் மற்றும் மக்களுக்காக செயல்பட உள்ளதாக அறிவித்தனர்.
மக்களது நலன்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதே, இந்த குழுவின் முக்கிய நோக்கமாகும் என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அஸ்ராப் வாஜ்டி டுசுகி கூறினார். நம்பிக்கைக் கூட்டணி அரசு, பல்வேறு பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருவதை அவர் குறிப்பிட்டுக் கூறினார். இப்பொய்களை மக்களுக்குத் தொடர்ச்சியாக தெரிவிக்க வேண்டும் என அவர் கூறினார்.
கடந்த ஆண்டு 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அம்னோவும் பாஸ் கட்சியும் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நெருக்கத்தின் சாரம் கடந்த மாதம் நடைபெற்ற கேமரன் மலை இடைத் தேர்தலில் பிரதிபலித்தது. பாஸ் கட்சியின் பேராதரவுடன் தேசிய முன்னணி அதிக பெரும்பான்மையோடு கேமரன் மலைத் தொகுதியை மீண்டும் கைப்பற்றியது.