சென்னை: இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடப் போகும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு, ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதர கட்சிகள் யாவும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வரும் வேளையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அனைத்து 40 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்புக்கு பின்னர், ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு டுவிட்டரில் வாழ்த்தினைத் தெரிவித்திருந்தார். கட்சியைத் தொடங்கி இரண்டாவது ஆண்டில் தேர்தலில் களம் இறங்க இருக்கும் தனது நண்பர் கமல்ஹாசனுக்கு பொது வாழ்விலும் வெற்றிகள் குவிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தார்.
ரஜினியின் அப்பதிவிற்கு பதில்கூறும் வகையில், கமல்ஹாசன், நல்லவர்கள் துணை நின்றால் நாற்பதும் நமதே என பதிவிட்டிருக்கிறார். இதன் மூலமாக கமல்ஹாசன் ரஜினிகாந்தின் ஆதரவை எதிர்பார்கிறார் என்பது தெளிவடைகிறது.
ஆயினும், இதற்கு முன்னதாக, தாம் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தரப்போவதில்லை என்றும், தனது ரஜினி மக்கள் மன்றம், ரஜினி ரசிகர் மன்றம் ஆகியவற்றின் பெயரில் தம்முடைய பெயரையோ, மன்றத்தின் கொடியையோ, எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ அல்லது பிரச்சாரத்திற்காகவோ பயன்படுத்தக் கூடாது என ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தார்.