புதுடில்லி: இந்திய இராணுவம் எம்மாதிரியான சூழலையும் எதிர்கொள்வதற்கு முழுத் தயாராக இருப்பதாக முப்படை அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) டெல்லியில் தெரிவித்தனர்.
நேற்று டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், முப்படை அதிகாரிகளான ஆர்.ஜே.கே.கபூர், சுரேந்திர சிங் மெஹல், மற்றும் தல்பீர்சிங் ஆகியோர், அபிநந்தனின் விடுதலை, இந்திய விமானப்படைக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றனர்.
இதற்கிடையே, இந்தியாவின் இரண்டு போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகவும், மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் இராணுவம் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், எம்மாதிரியான சூழலுக்கும் முப்படைகளும் தயாராக இருக்கின்றன என அவர்கள் தெரிவித்தனர்.
இந்திய நாட்டின் மக்களை பாதுகாப்பதில் முழுக் கவனம் செலுத்தி வருகிறோம் என அவர்கள் குறிப்பிட்டனர். இதையடுத்து, அவர்கள் இந்தியப் படைகள் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் விமானத்தின் பாகங்களை செய்தியாளர்களிடம் ஆதாரமாக காட்டினர்.
நேற்று (வியாழக்கிழமை), பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், பிரதமர் இம்ரான் கான், அபிநந்தனை, அமைதி கருதி விடுவிப்பதாக அறிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை, அபிநந்தன் டெல்லியில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.