கோலாலம்பூர்: தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகளான அம்னோ, மசீச மற்றும் மஇகா, நிதி அமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிராக காவல் துறையில் இன்று வியாழக்கிழமை புகார் அளித்தனர். அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளின் கூட்டணி மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் மீது தொடக்கப்படும் ‘போர்’ என அமைச்சர் கருத்துரைத்ததற்கு அவர்கள் இப்புகாரினை அளித்தனர்.
இந்த புகார் அறிக்கையை அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி, மஇகா இளைஞர் பகுதித் தலைவர் ஆர்.தினாளன், மசீச இளைஞர் பகுதித் தலைமைச் செயலாளர் டேனியல் வா வாய் ஹாவ் மற்றும் பாஸ் கட்சியின் கூட்டரசுப் பிரதேச இளைஞர் பகுதித் தலைவர் முகமது ஷாஹிர் அபு ஹசான் ஆகியோர் சமர்ப்பித்தனர்.
இந்த விவகாரம் குறித்து நிதி அமைச்சர் மன்னிப்புக் கேட்காவிட்டால் நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு பேரணிகள் நடக்கும் என அஷ்ராப் கூறினார்.
“மலேசியர்கள் இனவெறி பேச்சுகளை வெறுக்கிறார்கள் என்பதனை அவருக்கு நாங்கள் காட்ட விரும்புகிறோம்” என அஷ்ராப் குறிப்பிட்டார். மேலும், பேரினவாதவாதி என நிதி அமைச்சரை குறிப்பிட்டுக் கூறிய அஷ்ராப், அவர் அப்பதவியிலிருந்து விலக வேண்டும் எனக் கூறினார்.