கிரிஸ்ட்சர்ச்: (மலேசிய நேரம் நண்பகல் 12:30 மணி நிலவரம்- கூடுதல் தகவலுடன்) நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டில் இருவரையிலும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தகவல் வெயிட்டுள்ளனர். ஒரு நெருக்கடியான சம்பவம் நடைபெற்றிருப்பதாக நியூசிலாந்து காவல் துறையும் அறிவித்துள்ளது.
நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒன்பது பேர் உயிர் இழந்துள்ளதாகவும், தவிர பலர் காயமடைந்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே, நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருந்த, வங்கதேச அணி வீரர்கள் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த மசூதியில் இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆயினும், அவர்கள் பத்திரமாக தப்பி சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் தங்கும் விடுதியில் உள்ளதாகவும், இந்த சம்பவத்தின் காரணமாக அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் என வங்கதேச கிரிக்கெட் குழு தெரிவித்துள்ளது.
அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருக்கும் காவல் துறையினர் சுற்று வட்டாரத்திலுள்ள கட்டடங்களையும், பள்ளிகளையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து தீவிரமான சோதனைகள், தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.