பாசிர் கூடாங்: சுங்கை கிம் கிம் ஆற்றில் கொட்டப்பட்ட இராசயன நச்சுக் கழிவுகளினால் யாரும் பதற்ற நிலையை அடைய வேண்டாம் என பிரதமர் தெரிவித்துள்ளார். நிலைமை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், மக்கள் அமைதியுடன், பொறுமைக் காக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இது குறித்துப் பேசியப் பிரதமர், அதிகாரிகள் தங்களது பணிகளை சரி வரச் செய்து வருகின்றனர் என்றும், மக்கள் அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டுமென்றும் கூறினார். பதற்ற நிலைக் காணப்பட்டாலும், மருத்துவர்களின் திறனின் மீது தாம் நம்பிக்கைக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இம்மாதிரியான சூழல் முன்னதாக இப்பகுதியில் நிகழவில்லை என்றாலும், மருத்துவர்கள் தக்க நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்மாதிரியான சிகிச்சையை அளிக்கலாம் என்பதனை அறிந்து வைத்திருப்பது நம்பிக்கையை அளிக்கிறது என்றார்.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் பாசிர் கூடாங் பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட வேண்டும் என கருத்துகள் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்துப் பேசிய பிரதமர் துறை அமைச்சர் ஹனிபா மைடின், தற்போதைக்கு அவசரக் காலத்தை பாசிர் கூடாங் பகுதியில் அறிவிப்பதற்கு புத்ராஜெயா அனுமதிக்காது எனக் கூறினார்.
இந்த அறிவிப்பு ஜோகூர் மாநிலத்திலிருந்து வர வேண்டுமென்றும், நடப்பு நிலையில் எந்த ஓர் ஆபத்தான சூழ்நிலை நிலவுவதாக தெரியாதப் பட்சத்தில், மாநில அரசு இந்த விவகாரத்தை சரி செய்யும் என மத்திய அரசு நம்புவதாக அவர் கூறினார்.
தற்போதைய நிலவரம்படி, பரவியுள்ள காற்றின் தூய்மைக் கேட்டினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 3,555 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இது சம்பந்தமாக 31 புகார்கள் காவல் துறையில் அளிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோகூர் மாநில அரசாங்கத்தின் சுகாதாரம், சுற்றுச் சூழல் மற்றும் விவசாய துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் ஷாருடின் ஜமால் இந்த விவரங்களை வெளியிட்டார்.