Home நாடு கிம் கிம் ஆற்று நீர் முழுமையாக சுத்திகரிப்பு செய்யப்படவில்லை!- சுரைடா கமாருடின்

கிம் கிம் ஆற்று நீர் முழுமையாக சுத்திகரிப்பு செய்யப்படவில்லை!- சுரைடா கமாருடின்

653
0
SHARE
Ad

பாசிர் கூடாங்: கடந்த ஜூன் 20-ஆம் தேதி  முதல் பாசிர் கூடாங் பகுதியில் ஏற்பட்டுள்ள நச்சுக் காற்று சம்பவம் கிம் கிம் ஆற்று நீர் நச்சுக்கழிவுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளது என்று வீடமைப்பு மற்றும் நகராட்சிமன்ற அமைச்சர் சுரைடா கமாருடின் கூறினார்.

ஆற்றில் இருந்து வரும் நச்சுக் கழிவுகள் இன்னும் முழுமையாக வெளியேற்றப்படவில்லை என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையால் தமது துறைக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

துப்புரவுப் பணிகளை உடனடியாக செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் சுரைடா கேட்டுக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கடந்த மார்ச் 13-ஆம் தேதி பாசிர் கூடாங் கிம் கிம் ஆற்று நீர் பகுதியில் தொடங்கப்பட்ட சுத்திகரிப்பு நடவடிக்கையில் 900 மெட்ரிக்  டன்  கழிவுப்பொருட்களும்,  1,500  மெட்ரிக்  டன் மாசுபட்ட தண்ணீரும்  அகற்றப்பட்டிருந்தது. இச்சம்பவத்தில் சுமார் 6,000 குடியிருப்பாளர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். மேலும், 111 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

கடந்த வியாழக்கிழமை,  கிம் கிம் ஆற்று பகுதியிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாமான் மாவார் இஸ்லாமியப் பள்ளியின் மொத்தம் 15 மாணவர்கள் மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி அறிகுறிகள் காரணமாக சிகிச்சை மேற்கொண்டனர்.

இன்று திங்கட்கிழமை காலை, பாசிர் கூடாங்கில் உள்ள மேலும் எட்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதே அறிகுறிகளைக் கொண்டிருப்பதாக புகார் பெறப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.