
கிரிஸ்ட்சர்ச் – நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடைபெற்ற கொடூரத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரண்டு மலேசியர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் வேளையில், ஒருவரைக் காணவில்லை என மலேசிய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
சம்பவம் நடந்த மஸ்ஜிட் அல் நூர் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக நம்பப்படும் 39 வயதான ரஹிமி அகமட் என்பவர் என்னவானார் என்பது இதுவரை தெரியவில்லை. யாரும் அவருடன் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பான ஆகக் கடைசியான நிலவரங்கள் வருமாறு:
- இரண்டு பள்ளிவாசல்களில் நிகழ்ந்த சம்பவங்களினால் மரண எண்ணிக்கை 49 ஆக உயர்ந்திருக்கும் வேளையில், இந்தக் கொடூர சம்பவத்தைப் புரிந்த 28 வயதான பிரெண்டன் டாரண்ட் என்ற நபர் கொலைக் குற்றச்சாட்டிற்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான்.
- உலகத் தலைவர்கள் இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலேசியத் துணைப் பிரதமர் வான் அசிசா ஆகியோர் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
- நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டன் நிலைமையை நேரில் கண்காணிக்க தற்போது கிரிஸ்ட்சர்ச் வந்தடைந்துள்ளார். நியூசிலாந்து நாட்டின் துப்பாக்கிகள் மீதான சட்டங்களும் திருத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
- இட்ரிஸ் கைருடின் என்ற 14 வயது மலேசிய மாணவன் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொள்ள அல்நூர் பள்ளிவாசல் சென்றிருந்தபோது, அங்கு துப்பாக்கிச் சூட்டு சத்தங்களைக் கேட்டவுடன் சுவரேறிக் குதித்து, சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்று தப்பித்ததாகக் கூறியிருக்கிறான்.
இந்த சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மலேசியர்கள் யாராவது இருப்பின் கீழ்க்காணும் எண்களில் தொடர்பு கொள்ளுமாறு நியூசிலாந்துக்கான மலேசியத் தூதர் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார் :
+64-210440188 or +64220662118
அல்லது மின்னஞ்சல் முகவரி : mwwellington@kln.gov.my.