கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் பேசிய அன்வார் இப்ராகிமின் சிந்தனை மற்றும் நோக்கம் தெளிவான பார்வையைக் கொண்டிருந்தது என தேசிய முன்னணியின் கெத்தேரே நாடாளுமன்ற உறுப்பினரான அனுவார் மூசா குறிப்பிட்டார்.
அவரது உரையின் போது, அன்வார் அடுத்த பிரதமராகும் பக்குவத்தையும், தைரியத்தையும் புலப்படுத்துவதாக அமைந்தது என அவர் கூறினார். ஆயினும், அன்வார் பிரதமரானால் என்னவாகுமோ என்ற பயம் நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது என அவர் சுட்டிக் காட்டினார்.
அவரின் இந்தக் கூற்றை, எதிர்க்கும் வண்ணமாக, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் எழுந்து, அனுவார் எந்த ஒரு தீய எண்ணமின்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனக் கூறினார்.
அன்வார் இப்ராகிம், தனிப்பட்ட வேட்பாளராக நாட்டிற்கும் மக்களுக்கும் என்ன செய்ய இயலும் என்பதை எந்த ஓர் அரசியல் பாரபட்சமின்றி நாங்கள் பார்க்கிறோம் என அனுவார் கூறினார். அன்வார் போன்றோரை, ஏன் இன்னும் பிரதமர் பதவியில் அமரச் செய்வதில் கால தாமதம் ஏற்படுகின்றது என தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.