“பயங்கரவாத அமைப்புகளான ஜய்ஷ்–இ–முகமட் மற்றும் லஷ்கார்–இ–தாய்பா மீது பாகிஸ்தான் தீவிரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என வெள்ளை மாளிகையின் மூத்த நிருவாக அதிகாரி நேற்று புதன்கிழமை குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் நடவடிக்கையை அமெரிக்கா கண்காணித்து வருவதாகவும், முன்னதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிராக எம்மாதிரியான தண்டனையை பாகிஸ்தான் கொடுக்கும் என்பதை கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இனி இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசுதான் முடிவு சொல்ல வேண்டி உள்ளது என அவர் தெரிவித்தார்.
இவ்விரு நாடுகளுக்கு இடையே நிலைமை மோசமடையாமல் இருப்பதற்காக அமெரிக்கா உலக நாடுகளின் ஒத்துழைப்பையும் நாடி உள்ளதாக அவர் கூறினார். சீனா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், கத்தார், இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி இரு நாடுகளுகிடையே நிகழும் பதற்றத்தை சமாளித்து வருவதாக அவர் கூறினார்.