புத்ராஜெயா: அண்மையில் கொடூரமான துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகி தம் இன்னுயிரை நியூசிலாந்து வழிபாட்டுத் தலத்தில் துறந்தவர்களுக்காக மரியாதை செலுத்தவும் மலேசியர்களின் ஒருமைப்பாட்டு உணர்வை வெளிப்படுத்தவும் எதிர்வரும் சனிக்கிழமை மார்ச் 23-ஆம் நாள் காலையில் கோலாலம்பூர், ‘சோகோ’ (Sogo) வணிக வளாகத்திற்கு முன்புறம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அமைதிப் பேரணியில் அனைவரும் கலந்து கொள்ளும்படி பிரதமர் துறை அமைச்சகத்தின் சார்பில் அழைக்கப்படுகின்றனர்.
இந்த அமைதிப் பேரணி, காலை 7:00 மணியளவில் சோகோ வளாகத்தில் இருந்து சுதந்திர சதுக்கத்தை (Merdeka Square) நோக்கி புறப்பட இருப்பதால் இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அனைவரும் குறித்த நேரத்திற்குள் வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதேவேளை, அமைதியின் வெளிப்பாடான வெண்மை வண்ணத்தில் ஆடையுடுத்தி வரும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அரசு சாரா அமைப்புகளைச் சார்ந்தவர்கள், மலேசிய செயல்கூட்டணியினர் (ஜிபிஎம்), சமய நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு அமைப்பின் ஆதரவாளர்கள், தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறையினர், பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். குறிப்பாக பிரதமர் துறை சார்பில் பொன்.வேதமூர்த்தி, டத்தோஸ்ரீ டாக்டர் முஜாஹிட் யூசோஃப் ராவா ஆகிய இருவரும் இதில் சிறப்பு பிரமுகர்களாகக் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த வாரத் தொடக்கத்தில் நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் பள்ளிவாசலில் கொடூரனின் துப்பாக்கி இரவைகளுக்கு அப்பாவி மக்கள் பலியான அநியாயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இவ்வமைதிப் பேரணி நடைபெறும்.
தேசிய பள்ளிவாசல் தலைவரின் உரையுடன் மற்ற சமயத் தலைவர்களின் உரையும் இடம்பெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் துப்பாக்கித் தாக்குதலில் பலியானவர்களின் பிரதிநிதிகளும் இடம்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.